மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ரயில்வே துறையில் அதிக முதலீடு!

ரயில்வே துறையில் அதிக முதலீடு!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 150 பில்லியன் டாலரை இந்திய ரயில்வே துறை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது ரயில்வே துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்றார். அக்டோபர் 28ஆம் தேதியன்று ‘எகனாமிக் டைம்ஸ்’ விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பியூஷ் கோயல், “இந்திய ரயில்வே துறையைப் புதிய பாதையில் செலுத்த நான் முயற்சி செய்து வருகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ரயில்வே துறை எதிர்நோக்கி வருகிறது. இந்த முதலீடுகளால் ஏற்படும் வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், ரயில்வே துறையில் மட்டும் சுமார் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

பாதுகாப்பான, வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ரயில்வே துறை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதால் உள்நாட்டில் உற்பத்தித் துறை வளர்ச்சியடையும். இருப்புப் பாதைகளை முழுமையாக மின் மயமாக்கும் திட்டத்திற்கான காலகட்டத்தை ரயில்வே அமைச்சகம் 10 ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்புகளில் 30 சதவிகிதம் குறையும்” என்று பேசினார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon