மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

திருநங்கைக்கு மீண்டும் பணி!

திருநங்கைக்கு மீண்டும் பணி!வெற்றிநடை போடும் தமிழகம்

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட கடற்படை மாலுமிக்குக் கருணை அடிப்படையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியக் கடற்படையில் கிழக்கு ஆணையத்தின் கீழ் செயல்பட்டுவரும் விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். எக்சிளா தளத்தில் நேவி மெக்கானிக்கல் என்ற பொறியியல் பிரிவில் எம்.கே.கிரி என்பவர் பணியாற்றிவந்தார். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத் தனது விருப்பத்தின் பேரில் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் கூந்தல் வளர்ப்பது, சேலை கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கடற்படை அதிகாரிகள் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் கடற்படையில் பணிபுரியத் தகுதியற்றவர் எனக் கூறி அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்தனர்.

கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து கிரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்று (அக்டோபர் 31) விசாரித்த நீதிமன்றம், ”இது போன்ற வழக்கை முதன்முறையாக எதிர்கொள்கிறோம். கடற்படையில் ஒழுக்கமின்மை காரணமாக நீங்கள் அவரைத் தண்டிக்க முடியும். ஆனால், அதே சமயத்தில் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியும்” என்று கூறியுள்ளது.

“மாலுமியின் மனநிலை மற்றும் குடும்பச் சூழலைக் கவனிக்க வேண்டியது அவசியமானது. எனவே கடற்படை தனது உத்தரவைத் திரும்ப பெற்று பாதிப்புக்கு உள்ளான திருநங்கைக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடற்படையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon