ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அதிக ஏடிபி பட்டங்கள் வென்றவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டி ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்றது. இதில் அக்டோபர் 29 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஜர், 6-7 (5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவைத் தோற்கடித்து, எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம், அதிக ஏடிபி பட்டங்கள் வென்றவர்கள் பட்டியலில் இவான் லென்டிலை (94 பட்டங்கள்) பின்னுக்குத் தள்ளி, ரோஜர் ஃபெடரர் (95 பட்டங்கள்) 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜிம்மி கார்னர் 109 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
வெற்றி குறித்து ரோஜர் ஃபெடரர், "சிறப்பாக ஆடிய டெல் போட்ரோவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைப் போன்று ஒவ்வொரு வாரமும் நானும் சிறப்பாக ஆடினேன். ஆனால் அதேபோல் இனி வரக்கூடிய நாள்களில் ஆடுவது எனக்கு சற்றுக் கடினமானது" என்றார்.
மேலும், "எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஸ்விஸ் தொடரில் பட்டம் வெல்வதற்காக அதிகம் உழைத்துவிட்டேன். கடந்த ஆறு நாள்களில் ஐந்து ஆட்டங்களில் விளையாடிவிட்டேன். என் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதற்காக பாரீஸ் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் முழு உடற்தகுதியுடன் களமிறங்குவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.