மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 17 செப் 2019

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை!

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை!

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரவாரியத் தலைமையகத்தில் மின் கட்டணங்களை ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கட்டுவதற்கான திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி இன்று (அக். 31) தொடங்கிவைத்தார். இதன் மூலம், தமிழகம் முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மின் நுகர்வோர்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.

திட்டத்தைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்துள்ளது. மின் கம்பிகள் தாழ்வாகச் செல்லும் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு அதிகமாக இருந்தால் மட்டுமே, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை. மழை நின்ற பிறகு மின் இணைப்பு மீண்டும் சீராக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பூமிக்கு அடியில் மின் இணைப்புகள் உள்ள சென்னையின் பல பகுதிகளில் இந்த பிரச்சினை இல்லை என்று சொன்ன அமைச்சர், தலைக்கு மேல் மின் ஒயர்கள் உள்ள புறநகர்ப் பகுதிகளில் கனமழை நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதைப் மின் தடை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.

மின்சாரம் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் உதவி மையம் எண் 1912 செயல்படுகிறது. அதைத் தொடர்புகொண்டு மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். பிரச்சினை என்ன, எப்பொழுது புகார் தெரிவிக்கப்பட்டது, பிரச்சினையின் தீவிரம் என்ன என அனைத்து விவரங்களும் பதிவுசெய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் பொதுவாக எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும், அவர்கள் நிலம் அளித்தால் மின்சார வாரியமே துணைமின் நிலையம் அமைத்து, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை அளிக்கும் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது என்றார் அமைச்சர்.

“தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் பேசி பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின் உற்பத்தியிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார் மின் துறை அமைச்சர் தங்கமணி.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon