மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

பருத்தி: விலை கோரும் விவசாயிகள்!

பருத்தி: விலை கோரும் விவசாயிகள்!வெற்றிநடை போடும் தமிழகம்

பருத்திக்கான நிலையான விலையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்திய பருத்திக் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பருத்திக்கான விலை சரிந்துவருவதால் சாகுபடியும் குறைந்தே இருந்தது. இருப்பினும் கடந்த பருவத்தில் காய்கறிகள் மற்றும் பருப்பு விலை கடுமையாகச் சரிந்ததால் விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு இந்தப் பருவத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உள்ளது. இந்த ஆண்டு (2017-18) இந்தியா 400 லட்சம் மூட்டைகள் பருத்தி உற்பத்தி செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பருத்திக்கான விலையானது கடந்த சில ஆண்டுகளாக நிலையற்றதாகவே உள்ளது. இந்தச் சூழல் விவசாயிகளுக்கோ அல்லது ஆலைகளுக்கோ எந்த விதத்திலும் பயனளிக்காது என்று இந்திய பருத்திக் கூட்டமைப்பின் தலைவர் ஜே.துளசிதரன் கூறுகிறார். இந்த ஆண்டு பயிர் சாகுபடி 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பருத்தி விதைப்புப் பகுதிகளில் போதுமான அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததால் இந்த ஆண்டு உற்பத்தியில் எந்த பாதிப்பும் இருக்காது. சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழு (ஐ.சி.ஏ.சி) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ’இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் உபரி உற்பத்தி 75 சதவிகிதம் அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளது.

இந்திய அளவில் பருத்தி உற்பத்தியில் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முந்தைய ஆண்டுகளைப் போல இந்த முறை விலை சரியாமல் இருக்கவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் (எம்.எஸ்.பி.) குறைவான அளவில் விலை சரியாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பருத்தி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon