பருவமழை பாதிப்புகளைச் சமாளிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று (அக்.31) ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர் வேலுமணி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை எனப் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்த ஆட்சி போக வேண்டும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மீது ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார் என விமர்சித்த அவர், ஆர்.கே. நகருக்கு ஸ்டாலின் சென்று ஆய்வு செய்ததால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இரவுபகல் பாராமல் களப்பணி செய்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட வேலுமணி, தூர்வாரும் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன என்றும் கூறினார்.
2015ம் ஆண்டு பெய்த மழை வேறு; தற்போது பெய்துவரும் மழை வேறு என விளக்கமளித்த அவர், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 4500 வீடுகள் அகற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்துவருகின்றன. படகுகள், நிவாரண முகாம்கள், மருத்துவக் குழு ஆகியவை தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.