மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மழை: நிரம்பும் ஏரிகள்!

மழை: நிரம்பும் ஏரிகள்!

கனமழை காரணமாகச் சென்னைக்குத் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நான்கு ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது.

கடந்த ஆண்டு மழை பொய்த்துப்போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வறண்டுபோயின. இதனால் சென்னை மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகளிலிருந்து நீர் வழங்கப்பட்டுவந்தது.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பருவ மழை பெருமளவு பெய்துவருகிறது. ஒரு நாள் மழைக்கே சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் நேற்று முதல் 16.6 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீரிருப்பு இன்று (அக்டோபர் 31) 452 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 87 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

புழல் ஏரியில் நேற்று 347 மில்லியன் கனஅடியாக இருந்த நீர்மட்டம் இன்று 487 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் புழல் ஏரிக்கு வினாடிக்கு 69 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டியில் 300 மில்லியன் கனஅடியும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

இதனால் இந்த ஆண்டு சென்னை மக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்வதில் எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது என்று பொதுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon