மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மழை பாதிப்பு: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு!

மழை பாதிப்பு: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு!

திமுக செயல் தலைவரும் சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து இன்று (அக்டோபர் 31) தனது தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

தொகுதியின் அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அதன் பின் தொகுதியிலுள்ள திமுக நிர்வாகிகளோடும் தனியாக ஆலோசனை நடத்தி மழை நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வரும் மழை பாதிப்புகள் பற்றி வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தும் அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார் .

2015 வெள்ளம், 2016 வர்தா புயல் என்று தொடர்ந்து சென்னைக்கு பாதிப்புகள் வந்தன. ஆனால் அதற்குப் பிறகும் மழை நீர் வடிகால் வசதியை அரசு மேம்படுத்தாத காரணத்தால்தான் இன்று ஒரு நாள் மழைக்கே சென்னை முழுதும் மழை நீர் தேங்கி நிற்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

“மாநில அரசின் கவலை எல்லாம் மக்களை வெள்ளம் பாதிக்குமே என்பதைவிட, இந்த மைனாரிட்டி ஆட்சியை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதிலும், அமைச்சர்களில் சிலர் அணிமாறாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதிலும்தான் உள்ளது. மத்திய அரசும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று வெளிப்படையாகவே பக்க பலமாக இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் மழை எதிர்நோக்கு நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், சென்னை மட்டுமல்ல சென்னையின் சுற்றுப் புற பகுதி மக்களும் அச்சத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

“இந்த அரசை நம்பிப் பயனில்லை என்றுதான் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டிருக்கிறேன். கொளத்தூரில் திமுகவின் பகுதி, வட்டக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மழை நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன்’’ என்று ஆலோசனைக்குப் பிறகு கூறியுள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon