மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

தயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு!

தயார் நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக் குழு!

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய, 9 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிற நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. சாலையோரங்களில் வசிக்கும் மக்கள், பல சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை, சென்னையைப் புரட்டிப்போட்டது போன்று தற்போதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை வரும் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 9 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம், சென்னை முகாம்களில் ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் என்ற நிலையில் குழு தயாராக இருப்பதாகவும், தேவையைப் பொறுத்து மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், மீட்புப் பணிகளுக்கான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.

மேலும் மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மழையால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காக்க, தமிழகம் முழுதும் குளோரின் கலந்த குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. 0.5 குளோரின் பருகுவதால், எந்த நோயும் ஏற்படாது என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon