மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

குட்கா ஊழல்: புதிய ஆதாரம்!

குட்கா ஊழல்: புதிய ஆதாரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

குட்கா ஊழலே நடக்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் அடித்துச் சொல்லி வரும் நிலையில்... தமிழகத்தில் குட்கா உற்பத்தியாளர் ஒருவர் ஒன்பது கோடி ரூபாய் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகி , தமிழகத்தில் குட்கா வியாபாரம் நடப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது.

எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிற நிலையில் உடனே குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (அக்டோபர் 31) வலியுறுத்தியுள்ளார்.

வருமானவரித் துறை ஆய்வு நடத்திய குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. மாதவராவிடம் வருமானவரித்துறை நடத்திய விசாரணையிலும் இதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த ஆணையிட்டபோதும்... குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் தவிர சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவல்களை எல்லாம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கும் ராமதாஸ்,

’’தமிழ்நாட்டில் குட்கா தயாரித்து விற்கப்பட்டது உண்மை என்பது எம்.டி.எம். நிறுவனம் தானாக முன்வந்து கலால் வரி செலுத்தியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்திலும், காவல்துறையிலும் மேலிடத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவை எப்படி சாத்தியமாகும்? குட்கா உற்பத்தி மற்றும் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும்,தமிழக காவல்துறையின் உயரதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் உரிமையாளரே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கையூட்டுத் தடுப்புப் பிரிவு தயங்குவது ஏன்?

வருமானவரித்துறை சோதனை குறித்த மூல ஆதாரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கருவிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே விசாரணையை தொடர முடியும் என்று கூறி குட்கா ஊழல் விசாரணையை முடக்கி வைத்திருக்கிறது கையூட்டுத் தடுப்புப் பிரிவு. இது குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி.

குட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், கையூட்டுத் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிப்பதுடன், அமைச்சர் விஜயபாஸ்கரையும் பதவி நீக்க வேண்டும்’’ என்று அழுத்தமாக தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon