மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

விரைவில் டாஸ்மாக்கில் பணமில்லாப் பரிவர்த்தனை!

விரைவில் டாஸ்மாக்கில் பணமில்லாப் பரிவர்த்தனை!

தமிழகத்தில் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பணமில்லாப் பரிவர்த்தனை அமல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்திற்கு வருவாய் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் நிர்வாகம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்குத் தினந்தோறும் சராசரியாக, 70 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் விடுமுறை நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதுவரை இவையனைத்தும் ரொக்கப் பரிவர்த்தனையில் நடந்துவந்தன.

சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 50க்கும் குறைவான, டாஸ்மாக் கடைகளில் டெபிட், கிரெடிட் கார்டு வாயிலாக, பணம் செலுத்தும், 'ஸ்வைப்' இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு மாறும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், இதில் டாஸ்மாக் நிர்வாகம் தயக்கம் காட்டிவந்தது.

இது குறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை சில நவீன கடைகளில் இருந்தாலும், அதை ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை, பயன்படுத்துவதுமில்லை. காரணம், அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைக்கு மதுப்பாட்டில்களை ஊழியர்கள் விற்கின்றனர்.

இதைத் தடுக்க, அனைத்துக் கடைகளிலும் பணமில்லாப் பரிவர்த்தனையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து வங்கிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் பணம் உடனடியாக டாஸ்மாக் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். டாஸ்மாக் கடைகளை உடைத்துக் கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்களும் குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon