பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைஸா, ஹரீஷ் கல்யாண் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி, அதில் பங்கேற்றவர்களுக்குத் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்று தந்துள்ளது. ஒரு வருடமாக வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ஓவியா இன்று தமிழகத்தின் செல்ல மகள் ஆகிவிட்டார். பார்வையாளர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகி உள்ளார். அந்த வரிசையில் துணை நடிகையாக வலம் வந்த ரைஸா நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து இயக்குநர் இளன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இளன் ஏற்கனவே கிருஷ்ணா மற்றும் சந்திரன் நடித்த கிரகணம் படத்தை இயக்கியுள்ளார். ரைஸா, ஹரீஷ் நடிக்கும் பெயரிடப்படாத இந்த படம் ரொமாண்டிக் காமெடி வகையில் உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளது.