மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஆறு கதை, ஒரு கிளைமேக்ஸ்!

ஆறு கதை, ஒரு கிளைமேக்ஸ்!

6 அத்தியாயம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 30) சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் பார்த்திபன், சேரன், வெற்றி மாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, சுரேஷ் காமாட்சி, ஜாக்குவார் தங்கம், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சியாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்ட ஆறு திரைக்கதைகள், ஆறு இயக்குநர்கள், ஒரு கிளைமேக்ஸ் என உருவாகியுள்ளது 6 அத்தியாயம் திரைப்படம்.

ஆஸ்கி மீடியா ஹட் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எழுத்தாளரும், இயக்குநருமான கேபிள் சங்கர், எழுத்தாளர் அஜயன் பாலா, தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், லைட்ஸ் ஆன் மீடியா சுரேஷ், குறும்பட இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இப்படங்களை இயக்கியுள்ளனர். இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமன், விஷ்ணு, கிஷோர், சஞ்சய், வினோத், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதுமுகங்கள் அறிமுகமாகவுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்ற, தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பார்த்திபன், “2.O ஆடியோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை துபாய்க்கு அழைத்தபோது அங்கு செல்வதைத் தவிர்த்தேன். அங்கு நான் தேவை இல்லை, இங்கு நான் தேவை. சிறு முதலீட்டுப் படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியையே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமில்லை. இந்தக் கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்று பேசினார்.

படத்தில் பணிபுரிந்தவர்கள் பற்றி பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “படத்தில் வேலைசெய்த அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணிப் பணிபுரிந்தனர்” என்று கூறினார். பல ஆண்டுகளாக இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் எழுத்தாளர் அஜயன் பாலா, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் பேசும்போது, “எனது நீண்டகாலப் போராட்டத்துக்கு பேய்ப் படம்தான் உதவி செய்து வெற்றிபெற வைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்த ஒளிப்பதிவாளர் பொன்.காசிராஜன், நாயகன் கிஷோர், இசையமைப்பாளர் மூவரும் மிக சிறப்பான பங்களிப்பைத் தந்தார்கள்” என்று கூறினார்.

இப்படம் உருவானவிதம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், “ஆறு வெவ்வேறு வகையான குறும்படங்களை ஆறு டீம்களை வைத்து எடுத்து அவை அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு அத்தியாயமும் கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லாப் படங்களுக்கும் ஒரே கிளைமேக்ஸ் என்பதாகப் படம் முடியும்” என்று கூறினார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon