மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

செல்வகணபதிக்கு அதிமுக வலை!

செல்வகணபதிக்கு அதிமுக வலை!

முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போது திமுக மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளருமான செல்வகணபதி வீட்டில் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இதன் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. இதை அடிப்படையாக வைத்து செல்வகணபதியை மீண்டும் அதிமுகவுக்கு அழைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

சேலம் குமாரசாமிப்பட்டியில் வசிக்கும் செல்வகணபதி குடும்பதாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், வீட்டில் இருந்த இரு சக்கர வாகனமும் காரும் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரிக்கையில், உட்கட்சித் தேர்தலின் விளைவாகத்தான் இந்தத் தாக்குதல் என்றவர்கள், இது பற்றி மாநிலத் தலைமை வெளிப்படையாகக் கண்டிக்காதது குறித்து செல்வ கணபதி வருத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

திமுகவில் உட்கட்சித் தேர்தல் எப்போதும் தகித்துவரும் மாவட்டங்களில் சேலமும் ஒன்று. வீரபாண்டி ஆறுமுகம் இருக்கும்போதே அவருக்கு எதிராகப் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பினர் கோஷ்டி அரசியல் செய்துவந்தது எல்லாருக்கும் தெரியும்.வீரபாண்டி ஆறுமுகம் மரணத்துக்குப் பின் ஸ்டாலின் ஆதரவாளரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனின் கை ஓங்கத் தொடங்கியது. இதற்கிடையில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த செல்வகணபதியை ஸ்டாலின் மிகவும் மரியாதையோடுதான் நடத்தினார். இதன் மூலம் செல்வகணபதி ராஜ்யசபா எம்.பி.யானார். மேலும் தேர்தல் பணிக் குழு மாநிலச் செயலாளராகவும் பதவி அளித்தார்.

இப்போது சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கிறார் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன். செல்வகணபதியும் இந்த மாவட்டத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கிறார். கட்சி உறுப்பினர் சேர்க்கையில் இம்மாவட்டம் முழுவதும் தீவிர கவனம் செலுத்தி தனக்கென ஒரு தனி டீமை உருவாக்கிவருகிறார். இந்தப் பின்னணியில்தான் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருக்கிறது!

இந்நிலையில்... ‘கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்தும் உங்கள் வீட்டில் நடந்த தாக்குதலுக்குத் தலைமை ஒரு விசாரணைகூட நடத்தவில்லை. இந்தத் தாக்குதலை திமுக தலைமை கண்டும் காணாமல் இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கட்சியில் இனியும் இருக்க வேண்டுமா? அதிமுகவில் இருந்தபோது நடந்த கசப்புகளை மறந்து மீண்டும் வாருங்கள். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்’ என்று செல்வகணபதிக்கு அதிமுக நண்பர்கள் சிலர் தூதுவிட்டுள்ளார்களாம்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon