ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிக்கான மகளிர் தரவரிசைப் பட்டியலை நேற்று (அக்டோபர் 30) வெளியிட்டது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், 753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 725 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்தின் எமி சாட்டெர்த்வைட் 720 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஆஸ்திரேலியாவின் மெக் லானிங், முதல் இடத்திருந்து நான்காவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளார்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 656 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் மரிஸான்னே கப் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 652 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணி, முதல் இடத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிக்கான மகளிர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மித்தாலி ராஜும் ஆண்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியும் தற்போது முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.