மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பட்டேலின் புகழை மறைக்கும் காங்கிரஸ்!

பட்டேலின் புகழை மறைக்கும் காங்கிரஸ்!

சர்தார் வல்லபபாய் பட்டேலின் புகழை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாள் இன்று (அக்.31) கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்றம் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய மோடி, “சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவும் சுதந்திரம் அடைந்த துவக்க நாட்களிலும் இந்தியாவுக்கு வல்லபபாய் பட்டேல் வழங்கிய பங்களிப்பு குறித்து நாம் பெருமைகொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

முந்தைய ஆட்சியாளர்கள் அவரின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை மறக்கடிக்க முயற்சி செய்தனர் என்று காங்கிரஸை மறைமுகமாகக் குறிப்பிட்ட மோடி, ஆனால் இளைஞர்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர் எனப் பெருமிதம் கொண்டார். இந்தியா பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு எனவும் அவர் பேசினார்.

சர்தார் பட்டேலின் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதை வலியுறுத்தியே ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், விளையாட்டு வீரர்களான சர்தா சிங், தீபா கர்மாக்கர், சுரேஷ் ரெய்னா, கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon