மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ரயில் டிக்கெட்: திருநங்கைகளுக்குத் தனி குறியீடு!

ரயில் டிக்கெட்: திருநங்கைகளுக்குத் தனி குறியீடு!

ரயில்வே டிக்கெட் முன்பதிவு விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு ‘T’ என்னும் தனிக் குறியீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், அந்த நடைமுறையை அரசுத் துறைகளில் பல இடங்களில் பின்பற்றாததைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜாம்ஷெட் அன்சாரி பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது. ஆனால், திருநங்கைகளுக்கு ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பத்தில் தனி ஒதுக்கீடு இல்லை. இது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14, 15, 19, 21 ஆகியவற்றை மீறும் செயல். எனவே, மாநில அரசுத் துறைகளிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு உரிமை அளிக்கும் விதமாக அவர்களை மூன்றாம் பாலினத்தவராகச் சேர்க்க வேண்டும். மேலும், அவர்கள் பயணம் செய்யத் தனிப்பட்ட பெட்டிகள், முன்பதிவு இடங்கள், பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஜி.ரோகினி தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது நீதிபதிகள், “ ரயில்வே துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

அதன்படி, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ரயில்வே துறை அமைச்சகம், ரயில்வே, ஐஆர்சிடிசி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாகச் சேர்க்க உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்குப் படுக்கை வசதி, இருக்கை வசதி, உள்ளிட்டவற்றில் அனைத்து வகையான சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்றும் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, ரயில்வே துறை மற்றும் ஐஆர்சிடிசி நிறுவனம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து, டிக்கெட் முன்பதிவு மற்றும் நீக்கம் படிவத்தில் அவர்களின் பாலினத்தைச் சேர்த்தது. எனினும், திருநங்கைகள், தங்களை ஆண் அல்லது பெண் என்ற வகையிலேயே குறிப்பிட வேண்டி இருந்தது.

இந்நிலையில், திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அடையாளப்படுத்தும் வகையில், ‘டி‘ என்று குறிப்பிட ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுப் படிவங்கள், முன்பதிவை ரத்து செய்யும் படிவங்களில் எம் (ஆண்), எப் (பெண்) ஆகிய 2 பிரிவுகளுடன் ‘T‘ (டிரான்ஸ்ஜெண்டர்) என்ற மூன்றாவது பிரிவையும் குறிப்பிடும் வகையில் படிவங்களை மாற்றி அமைக்குமாறு அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் ரயில்வே வாரியம் அக்டோபர் 17ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது. எனவே, விரைவில், ரயில் டிக்கெட்டுகளில் திருநங்கைகள் ‘T ‘ என்ற மூன்றாவது பாலினமாக குறிப்பிடப்படுவார்கள்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon