மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம்!

பள்ளிகளில் கலைத் திருவிழா திட்டம்!

மாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கவும்,பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், பள்ளிகளில் கலையருவி திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா கொண்டாடும் வகையில் புதிய திட்டம் ஒன்றைக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும்,ஊக்குவிக்கவும் பல்வேறு தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், புதிதாக இந்தாண்டு முதல் புதிய போட்டிகள் 'கலையருவி திருவிழா' என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வட்டாரளவிலான 21 போட்டிகளும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 25 போட்டிகளும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 86 போட்டிகளும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை 91 வகைப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

இதில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், பறை, களரியாட்டம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் மற்றும் பழங்கால இசை வாத்தியங்களை வாசிப்பது தொடர்பான போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.இன்ட போட்டிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்படவுள்ளது. இதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட, மாநிலளவில் போட்டிகள் நடைபெறும்.

பள்ளி அளவிலான போட்டிகள் அக்டோபர் இறுதிக்குள்ளும், ஒன்றிய அளவிலான போட்டிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவில் நவம்பர் இறுதிக்குள்ளும், மாநில அளவிலான போட்டிகள் டிசம்பர் மாத முதல் வாரத்திற்குள் நடக்கும்.

இந்நிலையில்,உடுமலை,குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில், பள்ளிகளுக்கான கலையருவி நிகழ்ச்சிகள் நேற்று(அக்டோபர் 30) தொடங்கின. இந்த போட்டிகளில்,பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

களிமண்ணில் உருவம் அமைப்பது, நாடகம், நடனம், கையெழுத்து, என இயல்,இசை நாடகம் என முத்தமிழை மையப்படுத்தி பல்வேறு போட்டிகள் நடக்கிறது. ஒரு மாணவர், தனியாக மூன்று, குழுவாக இரண்டு என மொத்தம் ஐந்து போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் 'ஏ' கிரேடில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். வட்டார அளவில் அதிக புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு 'சாம்பியன்' பட்டமும் வழங்கப்படும். இந்த போட்டிகள் நாளை(நவம்பர் 1) வரை நடைபெறுகிறது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon