மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

டிசம்பரில் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

டிசம்பரில் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் முடிந்த பின் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் தேர்தல் முடிந்த பின்பே அவர் தலைவராவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மாகன் சமீபத்தில் கூறுகையில், “காங்கிரஸ் உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

“காங்கிரஸ் தலைவராக ராகுல் தலைமையேற்பதில் ஏன் கால தாமதமாகிறது?” என்ற கேள்விக்கு, “ராகுல் தான் எங்கள் தலைவர் என்று நாங்கள் நம்புகிறோம். காங்கிரஸ் தலைவராக மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும், நாட்டையும் தலைமை தாங்கும் தகுதியும் அவருக்கு உள்ளது” எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப நாள்களாக உடல்நலக் கோளாறு காரணமாகச் சோர்வடைந்துள்ளார். பாஜகவைச் சமாளிப்பதற்கும், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கும் ராகுலைத் தலைவராக நியமிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என அக்கட்சியின் தலைமையும் யோசித்து வருகிறது. தற்போது இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இதில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.

நேற்று (அக்.30) ராகுல் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இமாச்சல், குஜராத் தேர்தல்களுடன் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. குஜராத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. எனவே, காங்கிரஸ் தொடங்கப்பட்ட தினமான டிசம்பர் 28ஆம் தேதி ராகுல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon