மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

இந்திய சினிமாவா? இந்தி சினிமாவா?

இந்திய சினிமாவா? இந்தி சினிமாவா?

பிரபாஸ் என்ற நடிகர் பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் மூலமாகத் தொட்டிருக்கும் உச்சம், இத்தனை வருட இந்திய சினிமாவில் யாரும் தொடாதவை. இந்திய சினிமாவை மிகப்பெரிய பிரமாண்டத்துடன், இந்தியாவின் அழகியலுடனும் உலகத்துக்கு எடுத்துரைத்த படத்துக்காக ஐந்து வருடங்களைத் தியாகம் செய்து வெற்றியும் கண்ட நடிகர் ஒருவர், தனது சம்பளத்தை ரூ.20 கோடிக்கு உயர்த்தியதால், அவரை பாலிவுட் சினிமா ஏற்காதென்றால் இது இந்திய சினிமாவா, இந்தி சினிமாவா என்று கேள்வியெழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறதல்லவா!

பாகுபலி ஹிட் அடித்ததிலிருந்தே பிரபாஸை வைத்து படமெடுக்க விரும்பியவர் கரன் ஜோஹர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ‘சாஹோ’ படத்துக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்டவரையில் பிரபாஸ் மீதான கரன் ஜோஹரின் முடிவு மாறவில்லை. ஆனால், கரன் ஜோஹரின் ஒரு டிராமா திரைப்படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ.20 கோடி சம்பளம் கேட்டதால் அவரை கமிட் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இது ஒரு தயாரிப்பாளரின் தனிப்பட்ட முடிவு என்பதில் மாற்றமில்லை. அன்புள்ள லட்சியமே, நீ உன் முழு திறமையை வெளிக்காட்ட விரும்பினால் உன் முன்னோடிகளிடமிருந்து விலகி இரு என்று ட்வீட் பதிவு செய்த பிறகு இது கரன் ஜோஹரின் தனிப்பட்ட பிரச்னையாக இருக்க முடியாதல்லவா!

பாலிவுட்டில் தற்போதைய மார்க்கெட்படி அதிக சம்பளம் வாங்குபவர் சல்மான் கான் (ரூ.60 கோடி). அடுத்ததாக ஆமிர் கான், ஷாருக் கான் ஆகியோர் வருகிறார்கள். கடைசியாக அஜய் தேவ்கன் மற்றும் வருண் தவான் (ரூ.25 கோடி) ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒரு நிமிடம் இருங்கள், வருண் தவானுக்கு ரூ.25 கோடியா என ஆச்சர்யமடையலாம். ஆனால், ஜூத்வா 2 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது சம்பளத்தை ரூ.20 கோடியிலிருந்து 25 கோடிக்கு உயர்த்தியிருக்கிறார் வருண். இந்தி திரையுலகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாத ஒரு நடிகருக்கு ரூ.25 கோடியைக் கொடுக்கும் பாலிவுட், இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த, இந்திய சினிமாவின் முகம் என்று பெருமைப்பட்டுக்கொண்டிருந்த பாலிவுட்டை முகம் திருப்பச் செய்த பாகுபலியில் நடித்த பிரபாஸுக்கு ரூ.20 கோடியைக் கொடுக்கத் தயங்குவதேன்?

பல கோடிகளில் நடிகர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுவதும், அதற்காக தயாரிப்பாளர்களும் சினிமா சார்ந்து இயங்கும் துறைகளும் அழுத்தப்படுவதும் தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்தியில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு எத்தனைக் கோடியை வேண்டுமென்றாலும் கொடுப்போம், தென்னிந்திய சினிமாவிலிருந்து வந்தால் அப்படிக் கொடுக்க முடியாது என்று பாலிவுட் மறுப்பதை ஏற்றுக்கொள்வது கடினமே.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon