மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: காஷ்மீரில் உச்சபட்ச தன்னாட்சி: டெல்லியிடம் வேறு தீர்வு உண்டா?

சிறப்புக் கட்டுரை: காஷ்மீரில் உச்சபட்ச தன்னாட்சி: டெல்லியிடம் வேறு தீர்வு உண்டா?

ஆழி செந்தில்நாதன்

இந்த ஆண்டு பிப்ரவரி 25இல், ஹைதராபாத்தில் மான்தன் என்கிற பொதுமேடை ஒன்றில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுவரை இந்தியப் பேரமைச்சர்கள் யாரும் சொல்லத் துணியாத சொற்களைச் சொன்னார். “காஷ்மீரை இந்தியா கிட்டத்தட்ட இழந்துவிட்டது” என்று அவர் கூறினார். காஷ்மீரில் போராட்டக்காரர்கள்மீது பெல்லட் குண்டுகளை அடித்து இந்தியப் படையினர் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்த தருவாயில்தான் சிதம்பரம் இவ்வாறு பேசினார். இந்தியாவின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர்களில் சிதம்பரமும் ஒருவர் என்கிற நோக்கில் இந்த வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டால், இது எதிர்க்கட்சி அரசியல் எதிர்ப்பு என்று விட்டுவிடலாம். ஆனால், சிதம்பரம் முன்பு இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தவர். காஷ்மீரின் ரத்தக் கறைகளைத் தம் கைகளிலும் கொண்டிருப்பவர். காங்கிரஸின் மேலிடக் குழுவின் முக்கிய உறுப்பினர். சிதம்பரம் பேசிய கருத்துகளைத் தொடர்ந்து இந்தியாவின் அதிதீவிர தேசப் பக்தர்கள் அவர்மீது பாய்ந்தார்கள். அவர் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று கொதித்தெழுந்தார்கள்.

சிதம்பரம் மறுபடியும் தேச பக்தர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்திருக்கிறார். அண்மையில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் சர்மாவை மோடி அரசு நியமித்திருந்தது. இதுகுறித்து குஜராத்தில் ராஜ்கோட்டில் பத்திரிகையாளர்கள் சிதம்பரத்திடம் கேள்வி கேட்கிறார்கள். அப்போது பதில் அளித்த சிதம்பரம், ‘காஷ்மீருக்கு அதிகபட்சத் தன்னாட்சியை (Greater Autonomy) வழங்க வேண்டும்’ என்று சந்தேகத்துக்கே இடமில்லாத வார்த்தைகளில் கூறினார்.

தன்னாட்சியே காஷ்மீர் மக்களின் கோரிக்கை

“காஷ்மீர் பள்ளத்தாக்கின் கோரிக்கை என்பது (அரசியல் சாசனக்) கூறு 370ஐ எழுத்திலும் எண்ணத்திலும் மதிக்க வேண்டும் என்பதுதான். அதாவது அதிகபட்ச தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள். ஜம்மு காஷ்மீரில் நான் பலரோடு உரையாடியிருக்கிறேன். அங்கே ஆசாதி வேண்டும் என்று கூறும்போது, எல்லோரையும் என்று சொல்ல மாட்டேன். மிகப் பெரும்பாலானோர் தன்னாட்சியைத்தான் கோருகிறார்கள்” என்று சிதம்பரம் விளக்கமளித்தார்.

கிளம்பிற்றுக்காண் காவிச் சிங்கங்களின் கூட்டம். இடம் வேறு குஜராத்தாயிற்றே! ஏற்கெனவே எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய சோதனை இங்கே காத்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் உற்சாகமாக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. சிங்கத்தின் குகைக்குள்ளாகவே சென்று அதுவும் காஷ்மீர் விஷயத்தில் இப்படிப் பேசிவிட்டார் சிதம்பரம்.

“நேற்றுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் திடீரென்று யுடர்ன் அடிக்கிறார்கள். வெட்கக்கேடு, காஷ்மீர் சுதந்திரத்துக்கு குரல் எழுப்புகிறார்கள், பேசுகிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடியே கடுமையாகப் பதில் கொடுத்தார். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் பொறுப்பான பதவியில் இருந்தவரே இப்படிப் பேசலாமா என்று பெயரைக் குறிப்பிடாமல், சிதம்பரத்தை விளாசித் தள்ளினார். அதிர்ச்சி அளிக்கிறது என்று கடுப்புகாட்டினார் ஸ்மிருதி இரானி.

சிதம்பரத்தின் கருத்துகளை காங்கிரஸின் நிலைப்பாடு என்று சித்திரித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸின் நிலைப்பாடு இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முற்றிலும் நேரெதிரானது என்று கூறினார். அரண்டு போன காங்கிரஸ் கட்சியும் சிதம்பரத்தின் கூற்றுகளை அவரது சொந்தக் கருத்துகள் என்று கூறிக் கைகழுவியது.

சொல்லப்போனால் சிதம்பரம் கூறியதைக் கேட்டு காஷ்மீரிலுள்ள ஆசாதிவாதிகள்தான் கோபப்பட்டிருக்க வேண்டும். காஷ்மீரில் நடப்பது முழுச் சுதந்திரத்துக்கான போராட்டம். ஆசாதிக்கு வேறு ஒரு இலக்கணத்தை சிதம்பரம் அளிப்பதை காஷ்மீர் போராளி இயக்கங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆசாதிக்குப் புது இலக்கணம் தருகிற சிதம்பரத்தின் முயற்சியை இந்தியாவின் அரசியல் சாசன வெளியின் உச்சபட்ச சாத்தியப்பாடு என்று கருதலாம். அரசியல் சாசனக்கூறு 370ஐ அப்படியே ஏற்பதன் மூலமாக அல்லது மேம்படுத்துவதன் மூலமாக அதைச் சாத்தியமாக்கலாம். அதே சமயம் அது நிஜ நிலவரத்தை வெளிக்காட்டுகிற கருத்தும்கூட. ஏனென்றால் இதுவரை தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு தீர்வை இந்தியா முன்மொழிய முடியுமானால் அது காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சியை அளிக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்க முடியும். இந்தியாவுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. அதைப் போலவே, உலகின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை மற்ற நாடுகள் (பாகிஸ்தான் மட்டுமல்ல) ஏற்கும் வரை, காஷ்மீரின் ஆசாதிப் போராளிகளுக்கும்கூட வேறு வாய்ப்பில்லை. இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க விரும்புகிற இந்திய, பாகிஸ்தான் சமாதானவாதிகளின் கருத்தும் பெரும்பாலும் அதுதான். காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான குறைந்தபட்ச நிபந்தனையே அதிகபட்ச தன்னாட்சித்தான்.

ஆசாதிக்குப் புதிய அர்த்தம்?

காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, அரசியல் சாசனக் கூறு 370இன்படி நடப்பதுதான் என்று சிதம்பரம் போல பலரும் கருதுகிறார்கள். உமர் அப்துல்லா போன்றோரின் கருத்து அதுதான். சுதந்திரத்துக்குக் கொஞ்சம் கீழே சுயாட்சி என்கிற புரிதலில் இந்தக் கருத்துக்கு நிச்சயமாக ஓர் ஏற்பு இருக்கவே செய்கிறது. இறையாண்மை அற்ற மாநிலமாக இருப்பதைவிட இறையாண்மையை பகிர்ந்துகொள்கிற மாநிலமாக இருப்பது ஆசாதிக் கனவில் பாதி என்று பல காஷ்மீர் அறிவுஜீவிகளுமே கருதுகின்றனர். சுதந்திரம் (freedom) என்ற சொல்லுக்கும் விடுதலை (independence) என்ற சொல்லுக்கும் இடையிலான ஒரு வியாக்கியான இடைவெளியில் ஆசாதி என்ற சொல்லுக்கு சிதம்பரம் அர்த்தம் தேடுகிறார்.

பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று சொல்கிறவர்கள் தன்னாட்சியைப் பற்றிப் பேசினாலே இப்படி “தேச விரோதம்” என்று அலறுகிறார்களே, இவர்கள் என்ன பேசிக் கிழித்துவிடப் போகிறார்கள் என்று எகத்தாளம் செய்திருக்கிறார் உமர் அப்துல்லா. சிதம்பரம் கூறிய கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ள இதே நிலையில், காஷ்மீரில் “தன்னாட்சியை மீண்டும் திரும்பிக்கொண்டுவருதல்” தொடர்பான ஒரு தீர்மானத்தை தேசிய மாநாட்டுக் கட்சி நிறைவேற்றியிருக்கிறது.

இந்தியாவில் காஷ்மீர் இருக்க வேண்டுமானால் காஷ்மீர் தன்னாட்சி கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், காஷ்மீருக்குத் தன்னாட்சி கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் அவர்கள் தனியாகப் பிரிந்து செல்வதற்கான உரிமை உடையவர்களே. காஷ்மீருக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாகவே இந்தியா அந்தப் “பிரிவினை”யைத் தடுக்க இயலும்.

புது டெல்லிக்குக் காஷ்மீர் விவகாரத்தில் காலம் கடந்துபோய் நெடுங்காலமாகிறது. பாஜக எரியும் தீயில் எண்ணெய் வார்த்துவரும் வேலையைத் திறம்படச் செய்துவருகிறது. பெல்லட் குண்டுகள் துளைத்த முகங்களும் பீரங்கி முனையில் கட்டப்பட்ட காஷ்மீரிய உடலும் உலக அளவில் இந்தப் பிரச்னையை உயிர்ப்புடனேயே வைத்திருக்கின்றன.

இன்றைய சகாப்தம் என்பது பேரரசிய தேசியங்களை எதிர்த்துப்போராடும் தனி இனங்களின் போராட்ட சகாப்தமாகவே இருக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்பெயின், துருக்கி, பிரிட்டன், ஈராக், ஈரான், இலங்கை, பர்மா போன்ற தற்போது பேரரசிய தேசியவாதிகளால் ஆளப்படுகிற நாடுகளின் தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் இருவேறு போக்குகளைத்தான் சிதம்பரமும் மோடியும் பிரதிபலிக்கிறார்கள். இப்போதைய கேள்வி: கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா?

ஏகபோக மூலதனமும் அணுக்க முதலாளித்துவமும் (crony capitalism) ஒற்றையாட்சியாளர்களின் பக்கமே நிற்கின்றன. மறுபக்கம், நியோ லிபரலிசப் போக்குக்கு வெளியேயுள்ளவர்களும் சிதம்பரம் போன்ற “அனுபவஸ்தர்களும்” கூட்டாட்சியின் பக்கம் நிற்கிறார்கள்.

இந்த இரு தரப்பினரும்தான் உலக அரசியலில் இப்போது நிறைந்திருக்கிறார்கள். ஈழத்திலிருந்து பர்மா வழியாக திபெத்துக்குப் போனாலும் சரி, காஷ்மீரிலிருந்து குர்திஸ்தான் வழியாக கேட்டலோனியாவுக்குப் பயணம் செய்தாலும் சரி. வழிநெடுக நாம் இந்த இரு தரப்பினரின் ஆட்டங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 21ஆம் நூற்றாண்டிலும் பேரரசிய தேசியத்துக்கும் (imperial nationalism) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இடையிலான முரண்பாடு தொடர்கிறது என்பது மட்டும் உண்மை.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர். மொழிசார் அரசியல் குறித்த ஆழமான சிந்தனைகளைப் பல தளங்களிலும் முன்வைத்து வருபவர். தொடர்புக்கு [email protected])

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon