மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

அதிகரிக்கும் சிமென்ட் தேவை!

அதிகரிக்கும் சிமென்ட் தேவை!

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாகக் குறைந்திருந்த சிமென்டுக்கான தேவை நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் தொடங்கும் நான்காவது காலாண்டில் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு சிமென்டுக்கான தேவை குறைந்து போனது. மேலும், சாலையமைப்பு, நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் சிமென்டுக்கான தேவை குறைந்தது. சிமென்ட் உற்பத்தியை எடுத்துக்கொண்டால், ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் 3.2 சதவிகித சரிவுடன் 117.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 121.2 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘ஒரு சில மாநிலங்களில் ஏற்பட்ட மணல் தட்டுப்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் காணப்பட்ட மந்தநிலை காரணமாக சிமென்டுக்கான தேவை குறைந்துபோனது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிமென்டுக்கான தேவை 3.1 சதவிகிதம் சரிந்திருந்தது. எனினும், வீடமைப்புத் திட்டம், சாலை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டில் சிறப்பாக இருக்கும் என்பதால் சிமென்டுக்கான தேவை அதிகரிக்கும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் ஏற்பட்ட மணல் தட்டுப்பாட்டால் சிமென்டின் தேவைக் குறைந்திருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் உற்பத்தியைப் பொறுத்தவரையில், மே மாதம் 6.7 சதவிகித உயர்வுடன் 24.8 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் சிமென்ட் உற்பத்தி 24.5 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், ஜூலை மாதத்தில் 22.7 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் குறைந்து போனது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon