மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஒருநாள் மழைக்கே இந்த நிலையா?

ஒருநாள் மழைக்கே இந்த நிலையா?

‘பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், ஒருநாள் மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது” என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒருவாரத்துக்கு முன்பாகவே குறிப்பிட்டிருந்தேன். வானிலை ஆராய்ச்சி மையம் பருவமழை குறித்துத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது, எனவே, 'குதிரைப் பேர' ஆட்சி உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கையும் வைத்திருந்தேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைத் தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று, அங்கிருக்கக்கூடிய பிரச்னைகளை எல்லாம் நேரில் பார்த்து, மழை தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாய்களைச் சீர்செய்து, குப்பைகளை அகற்ற வேண்டும். ஓரிரு நாட்களில் இந்தப் பணிகளை அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ளாவிட்டால், திமுகவினர் தங்களால் முடிந்தவரையில் அந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று சொல்லி இருந்தேன்.

நான் பார்த்துவிட்டு வந்த பிறகு, அந்தப் பகுதிகளில் மட்டும் ஓரளவுக்குச் சீர்ப்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நேற்றைய தினம் வந்திருக்கிறது. இதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, அந்தப் பகுதியில் மட்டுமல்ல, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு இடங்களில் உள்ளன. அங்கெல்லாம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஈடுபட்டிருந்தால் ஒருநாள் மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்தார்.

“விமர்சனங்களை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறிய ஸ்டாலின், “தமிழக அரசும், மத்திய பாஜக அரசும், பாஜகவின் தமிழக தலைவர்களும் வழக்குகளைப் போடுவது, கலவரத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon