மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

விவசாயிகளைப் பாதிக்கும் டிராக்டர் விதிமுறை!

விவசாயிகளைப் பாதிக்கும் டிராக்டர் விதிமுறை!

விவசாயத்துக்கு உபயோகிக்கும் டிராக்டர்களைப் போக்குவரத்து வாகனங்களின் பட்டியலில் இணைக்கும் அரசின் முடிவால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ‘ஸ்வராஜ் இந்தியா’ கட்சி மத்திய சாலைப் போக்குவரத்துத்துறையிடம் முறையிட்டுள்ளது.

’ஆம் ஆத்மி’ கட்சியிலிருந்து பிரிந்து சென்ற யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்ட கட்சிதான் ‘ஸ்வராஜ் இந்தியா’. இக்கட்சி விவசாயத்துறையில் அரசு மேற்கொண்டுள்ள விதிமுறையை எதிர்த்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது. அதாவது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர்களை போக்குவரத்து வாகனங்கள் பட்டியலில் இணைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும், இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சரான நிதின் கட்கரியிடம் இக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்வராஜ் இந்தியா கட்சியின் செய்தித் தொடர்பாளரான ராஜீவ் கிடாரா கூறுகையில், “இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் டிராக்டர்களை ஓட்டுவதற்கான உரிமம் பெறுவதற்கு விவசாயிகள் குறைந்தது எட்டாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கும். இந்திய விவசாயிகளில் எத்தனைப் பேர் கல்வி பயின்றுள்ளனர் என்று அரசு அறிந்துள்ளதா? விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு மிகவும் தெளிவாகவே தெரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இந்த நடவடிக்கை தேவையில்லாத ஒன்றாகும்” என்கிறார்.

“இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் விவசாயத்துக்கான டிராக்டர்களின் வரி தற்போதுள்ள 12 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்ந்துவிடும். மேலும், இந்த டிராக்டர்களை இயக்குவதற்கு பெர்மிட் பெற வேண்டி இருக்கும். இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுமை ஏற்படும்” என்றும் இக்கட்சி முறையிட்டுள்ளது.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon