மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஆசிய ஹாக்கி: முதலிடம் பிடித்த மகளிர் அணி!

ஆசிய ஹாக்கி: முதலிடம் பிடித்த மகளிர் அணி!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் சீன மகளிர் அணியை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

பெண்களுக்கான ஒன்பதாவது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர், ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் நேற்று (அக்டோபர் 30) சீனாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்திவந்தது. 19ஆவது நிமிடத்தில் குர்ஜித் கவுர், இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார். அதன் பிறகு சீனாவால் அதற்குப் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் நவ்ஜோத் கவுர் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு சீன அணியின் கேப்டன் குய்ஜியா, 38ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 1-2 என ஆறுதல் அளித்தார். அதன் பிறகு மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்தியா, 49 மற்றும் 58ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி நேகா கோயல், ராணி ஆகியோர் கோல் அடிக்க, ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் சிங்கப்பூரை (10-0) வென்றது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் சீனாவை வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை நடக்கும் அடுத்த லீக் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon