மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்!

புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில், புதுச்சேரி இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால், புதுச்சேரி மாநிலத்தைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த 13,137 இரண்டாம் நிலை காவலர் பணிக்கும், 1,015 இரண்டாம் நிலை சிறை காவலர் பணிக்கும், 1,512 தீயணைப்பு வீரர்கள் பணிக்கும் 6 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மே 21ஆம் தேதி 32 மாவட்டங்களின் 410 மையங்களில் தேர்வு நடத்தியதில் 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் பங்கேற்று நடைபெற்ற எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு உட்பட அனைத்துத் தேர்வுகளும் முடிந்து தேர்வானவர்களுக்கு பயிற்சியும் துவங்கவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வில், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150 பேருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இழக்கப்படுவதாகக் கருதுகிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம், “தமிழக காவல் துறையில், புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது சரியா?” என்ற கேள்வியை நாம் முன்வைத்தபோது“சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்கு, இந்திய குடிமகன்கள் விண்ணப்பிக்கலாம் என்றுதான் அறிவிப்போம், வினாத்தாள் தமிழிலிருக்கும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார். அவரிடம், “புதுச்சேரி சீருடைப் பணியாளர்கள் தேர்வில், தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லையே” என்றோம், “அது குறித்து தனக்குத் தெரியாது” என்றார்.

தொடர்ந்து புதுச்சேரி காவல் துறை கண்காணிப்பாளர் ஒருவரிடம், “தமிழக சீருடைப் பணியாளர்கள் தேர்வில், புதுச்சேரி இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும்போது, புதுச்சேரி சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழர்களை தட்டிக்கழிப்பது ஏன்?” என்ற கேள்விக்கு, “புதுச்சேரி சிறிய மாநிலம். தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால், புதுச்சேரி இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இதைப்பற்றி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கூறுகையில், “புதுச்சேரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணி வழங்குவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே மத்திய அரசு தமிழர்களை அனைத்து வேலைவாய்ப்புகளிலும் புறம்தள்ளி வருகிறது. இந்த நிலையில் சீருடைப் பணியாளர்கள் பணிக்கு மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்படுவதில் பங்குபோட்டு புதுச்சேரி இளைஞர்களுக்கு வழங்குவதால், தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்றால் தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்க வேண்டும்” என்று அழுத்தமாக எடுத்துக் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் பற்றியும், மாநிலம் இணைப்பு பற்றியும், புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏவிடம் கருத்து கேட்டோம், “மாநில இணைப்பு என்ற கருத்து அறிவானவர்கள் பேசுவது அல்ல; கலவரத்தைத் தூண்டுவது போன்றது. வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் பேசி சுமுகமாகப் பேசி தீர்வுகாண வேண்டும்” என்றார்.

புதுச்சேரி மாநிலத்தில், தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதற்கு, தமிழக தலைமைச் செயலாளரும், முதல்வரும் முயற்சி செய்வார்களா என்பதுதான் தமிழக இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon