மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஏப் 2020

சிறப்புக் கட்டுரை: கண்ணதாசனை நினைவூட்டும் வாலி!

சிறப்புக் கட்டுரை: கண்ணதாசனை நினைவூட்டும் வாலி!

தினேஷ் பாரதி

வாலியுடனான உரையாடலில் கண்ணதாசன் ஒருமுறை இப்படிச் சொல்கிறார்: “என்ன ஓய்... நீர் எழுதிய பாடலையெல்லாம் நான் எழுதியதாக சொல்கிறார்கள்...”

அதற்கு வாலி, “அப்படியாவது என் பாடல்கள் புகழ் அடையட்டும்” என்று மறுமொழி உரைக்கிறார். இன்றும்கூடப் பலருக்கும் வாலியின் பல பாடல்களை கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்ற எண்ணம் இருக்கிறது.

வாலி என்றால் ஜாலியாகப் பாட்டெழுதுவார், கவித்துவமாய் எழுத மாட்டார் என்ற பிம்பம் பலரிடத்திலும் இருக்கிறது. கவித்துமான பாடல்களைக் கண்ணதாசனைத் தவிர வேறொருவர் எழுத முடியாது என்று அடித்துப் பேசிய பலரின் எண்ணங்களை உடைத்துப் போடும் விதமாக பல பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

தாலாட்டு

தாலாட்டு என்றதும் கண்ணதாசனின் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்ற பாடல்தான் எல்லோருக்கும் நினைவு வரும். அதில் இடம்பெற்ற ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி வளர்ந்த கலை அன்னமே’ என்ற வரிகளை மெச்சிப் பேசுவர். அவ்வரிகளுக்கு நிகரான தாலாட்டுப் பாடலை வாலியும் எழுதியுள்ளார் . உதாரணமாக ‘அத்தை மடி மெத்தையடி’ பாடலை எடுத்துக்கொள்வோம். அதில் பல்லவியை அடுத்து வரும் சரணத்தில்,

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி

முல்லை மல்லிகை மெத்தையிட்டு

தேன் குயில் கூட்டம் பண் பாடும்

மான்குட்டி கேட்டு கண் மூடும்

என்ற வரிகளை கேட்டதும் கண்ணதாசன் என்றே எண்ணத் தோன்றும் ஆனால், அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் வாலி. அதே போல 'செல்லக்கிளியே மெல்லப் பேசு' பாடலில்,

திங்கள் முகம் எடுத்து

செவ்வாய் இதழ் எடுத்து

வெள்ளை மலர்ச் சிரிப்பில்

பிள்ளை வருவான்

தத்தும் நடை நடக்க

தண்டை குரல் கொடுக்க

சித்தம் குளிர வைக்க

முத்தம் தருவான்.

என்கிற சரணத்தைக் கேட்கையில் அதன் கற்பனை வளம் மெய்சிலிர்க்க வைக்கும். இதை எழுதியது கண்ணதாசன் என்றே எண்ணத் தோன்றும். ஆனால், அப்பாடலையும் வாலியே எழுதியுள்ளார்.

காதல்

காதல் ரசம் சொட்ட சொட்ட அள்ளித்தருவதில் கண்ணதாசனைப் போல் யாரும் உண்டோ என்ற கேள்விக்குப் பதிலாக வாலியின் பல பாடல்கள் இருக்கின்றன. ஒரு பெண்ணின் மனதை அவளது அகவெளிப்பாடாய் பதிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. அப்படி பெண்ணின் அகமனதை வெளிப்படுத்தும் பாடலாசிரியர்களில் வாலியும் ஒருவராய் இருந்திருக்கிறார் என்பதற்கு அவர் எழுதிய ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான்’ என்ற பாடலே சான்று. அதில்,

மனசுக்குள்ளே தேரோட்ட

மை விழியில் வடம் புடிச்சான்

மரிக்கொழுந்து வாசத்திலே

மாந்தோப்பில் வழி மறிச்சான்

மாந்தோப்பில் வழி மறிச்சி

மயக்கத்தையே வரவழைச்சான்

என முதல் சரணத்தில், காதல் மயக்கத்தைத் தந்த காதலன் அப்படியே விட்டு போய்விடுவானோ என்று சொன்னவர், இரண்டாம் சரணத்தில் இப்படிச் சொல்கிறார்.

தை மாசம் தாலி கட்ட

மார்கழியில் கைய புடிச்சான்

யமுனையிலே வெள்ளம் இல்லை

விடியும் வரை கதை படிச்சான்

விடியும் வரை கதை படிச்சு

முடியாமல் முடிச்சு வச்சான்

என ஏக்கத் தொனியில் முடித்து வைக்கிறார். இந்த வரிகளைக் கேட்பவர்களுக்கு கண்ணதாசனையே நினைவுப்படுத்தும். ஆனால் இந்த கற்பனை வாலியுடையது.

பெண்ணின் மனதை மட்டுமல்லாது ஆணின் அக மனதை, பெண்ணின் மீது ஆணுக்கு ஏற்படும் காதலின் கற்பனைத்துவத்தையும் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். காவியப் பாடலாய் ஒலிக்கும் ‘மாதவி பொன்மயிலாய் தோகை விரித்தாள்’ என்ற பாடலில்,

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்

இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

கூனல் பிறை நெற்றியில் குழலாட

கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட

கலை மானின் இனம் கொடுத்த விழியாட

அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட...

எனச் சரணத்தில் இலக்கியச் சாரத்தை வடித்திருக்கிறார் வாலி. அதே போல் ‘பவளக் கொடியிலே’ பாடலின் பல்லவியிலும் சரணத்திலும் கற்பனை ரசம் நிரம்பியிருக்கும். ‘பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்... புன்னகை என்றே பேராகும்... கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்... பெண்மயில் என்றே பேராகும்’ என்கிற பல்லவியின் தொடக்கத்திலே கற்பனைத்துவம் ததும்பி வழியும்.

அதன் முதல் சரணத்தில், “காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்” என்று மெல்ல நடந்தால்கூட காதலியின் பாதங்கள் நோகுமென நெகிழ்கிறார். காதலனின் மனதை வெளிப்படுத்தும் விதமாக,

ஆடைகள் அழகை மூடிய போதும்

ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்

மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்

வாழ்ந்திடும் காலம் நூறாகும்

எனக் காதலனின் உச்சகட்ட மனதின் வெளிப்பாட்டை சரணத்தில் கனியச் செய்திருக்கிறார். ஒரு பெண்ணின் அவயவங்களை அனுபவ வார்த்தைகளாய் காட்சிப்படுத்த கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும் என்பதற்குப் போட்டியாக ‘நிலவு ஒரு பெண்ணாகி’ என்ற பாடலில், “மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ... மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ...” என்று பல்லவியில் வருணித்து விட்டு சரணத்தில்,

புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக

பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ...

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளைக்கரமும்

தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் தொடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியென்பேன்

என இந்த ஒரே பாடலில் ஒரு பெண்ணின் அவயங்களை அவ்வளவு மெச்சியிருக்கிறார். இந்த ஒரு பாடலே போதும் கண்ணதாசனின் கற்பனைக்கு ஈடுகொடுக்கக்கூடிய பாடல்களை வாலியும் எழுதியிருக்கிறார் என்பதைப் பறைசாற்றுவதற்கு.

தத்துவம்

தத்துவப் பாடல்கள் என்றாலே கண்ணதாசன்தான். ஆனால் கண்ணதாசனுக்கு நிகராகவும் கண்ணதாசன்தான் இதை எழுதியிருக்க வேண்டும் என்றும் பலர் எண்ணியிருக்கும் பாடல்களை வாலியும் எழுதியுள்ளார். ‘ஆண்டவனே சாமி நீ கொடுத்த பூமி’ என்னும் பாடலில்,

பானைக்கொரு சோறு எடுத்து பதம் பார்க்கும் கதையாட்டம்

அன்புக்கொரு குடும்பம் - எங்க

அண்டை வீட்டுக் குடும்பமய்யா

வெள்ளாமெ செஞ்சவர்க்கு தள்ளாமெ வந்தாலும்

தள்ளாம காப்பாத்தும் தாயாட்டம் குடும்பமய்யா

எனக் குடும்ப உறவுகளின் மன அமைப்பைத் தத்துவார்த்தமாய்ச் சொல்லிக் கடந்து செல்கிறார்.

‘காசேதான் கடவுளப்பா’ என்ற பாடலில்,

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்

அவனும் குருடனும் ஒன்றாகும்

களவுக்குப் போகும் பொருளை எடுத்து

வறுமைக்குத் தந்தால் தருமமடா

பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு

பூட்டி வைத்தால் அது கருமமடா

எனப் பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதை தத்துவார்த்தமாய் சொல்லி விடுகிறார். ‘நான் பெத்த மகனே நடராஜா’ என்ற பாடலைக் கேட்டபோது கண்ணதாசன் என்றே எண்ணத் தோன்றியது. பிறகு வாலியின் பாடல் அடங்கிய வாலி ஆயிரம் தொகுப்பைப் படித்த பிறகுதான் வாலி என்று நம்ப முடிந்தது. அதற்குக் காரணம் அப்பாடலில் இடம்பெற்ற, ‘சக்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்கிறப்போ சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்’ என்ற வரிகள்தான். ஏனெனில் ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடலை எழுதியது கண்ணதாசன். இந்தப் பாடலும் அதற்கு இணையான கற்பனையைக் கொண்டுள்ளது. ஆகையால் இதுவும் அவராகத்தான் இருக்க முடியும் என்ற திண்ணம்.

அதேபோல் கண்ணதாசன் எழுதியதென்று பல நாள்களாய் பலரும் கருதிய பாடல்களுள் ஒன்று. ‘ஒண்ணாயிருக்க கத்துக்கணும்’ என்ற பாடல். அதில்,

வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்

அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்

உன்னைக் கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா

அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா

என கண்ணதாசனின் வரிகளையும் ஞாபகமூட்டுகிறார். ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’ என்கிற பாடலில்,

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?

மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

என உழைக்கும் மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் வாலி.

நகைச்சுவை

கண்ணதாசன் பாடல்களை விட வாலியின் பாடல்களில் நகைச்சுவை அதிகம் நிரம்பியிருக்கும். அந்த நகைச்சுவையிலும் கற்பனை நிரம்பியிருக்கும். உதராணமாக ‘வரதப்பா வரதப்பா’ பாடலில்,

குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது - அது

அனுமந்த ராவ் அவியலிலே கலந்திருக்குது

மேரியம்மா கேரியரில் எறா இருக்குது - அது

பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

சமையலெல்லாம் கலக்குது - அது

சமத்துவத்த வளர்க்குது

ஜாதி சமய பேதமெல்லாம்

சோத்தக் கண்டா பறக்குது

என்னும் இந்த வரிகளில் நகைச்சுவை ததும்பியிருந்தாலும், சோசலிஷத்தை நுட்பமாய் வலியுறுத்தியுள்ளார் வாலி. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களின் கலப்பை நகைச்சுவைத் தமிழில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சோகம்

காதலும் சோகமும் கண்ணதாசன் பாடல்களில் அதிகம் இடம்பிடித்திருக்கும். அந்த வகையில் வாலியும் தனது சோக கீதங்களில் மேம்பட்ட கற்பனை வளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்ணின் மனக் காயத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’ பாடலில்,

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி

ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவாண்டி

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி

நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி

என்னும் வரிகளில் பெண்ணின் காத்திருப்பின் வலியைக் கண்ணீர் மொழியில் கவித்துவமாக்கி இருக்கிறார் வாலி. அதேபோல் ஆணின் சோக நிலைப்பாட்டை ‘காகிதத்தில் கப்பல் செய்து’ பாடலில் பதிவு செய்துள்ளார். இந்தப் பாடலை விக்கிபீடியாவில் தேடினால் கண்ணதாசன் எழுதியதாகப் பதிவிடப்பட்டிருக்கும்.

ஆனால், இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் முழுக்க வாலியே எழுதியுள்ளார்.

முள் நடுவே மலர் வளர்த்து

முடியும் வரை காத்திருந்தேன்

மலர் பறிக்கும் வேளையிலே

முள் தைத்த கதையானேன்

என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கற்பனை கண்ணதாசனுக்கே உரியது என்று பலரும் எண்ணி இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்று பதிவிட்டுள்ளனர். இந்த நம்பிக்கையே வாலியின் வலிமையைப் பறைசாற்றி விடுகிறது.

மீனவ மக்களின் தேசிய கீதமாக இன்றைக்கும் பேசப்படும் ஒரே சோக கீதம் ‘தரை மேல் பிறக்க வைத்தான்’ என்ற பாடல்.

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை

என்னும் வரிகளிலே உயிரை நனையச் செய்யும் வாலி. அடுத்த சரணத்தில்,

கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடிநீர் தருபவர் யாரோ

தனியாய் வந்தோர் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்

என்ற வரிகளைக் கேட்பவர் மனதில் சோகம் பீடித்துவிடும். மீனவர்களின் வேதனையை அவ்வளவு கவிச்செறிவுடன் தந்து உருக வைத்துவிடுகிறார் வாலி.

தாலாட்டு, காதல், தத்துவம், நகைச்சுவை, சோகம் என மனிதனின் பல்வேறு நிலைப்பாட்டினை கண்ணதாசனுக்கு நிகராக பல பாடல்களில் தந்து தன்னை நிரூபித்தாலும், வாலியின் பல பாடல்களில் இடம்பெற்றிருக்கும் கற்பனைத்துவமும் கவித்துவமும் கண்ணதாசனை நினைவூட்டவே செய்கிறது. தமிழ்த் திரையுலகில் கற்பனைக்கும் மொழிவளத்துக்கும் கவித்துவத்துக்கும் நிகரற்ற சிகரமாக வீற்றிருப்பவர் கண்ணதாசன். அப்படிப்பட்ட கண்ணதாசன் எழுதியதாகக் கருதப்படும் வரிகளை ஏராளமாகப் படைத்துத் தந்திருப்பவர் வாலி. இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?

ராமாயணத்தில் வரும் வாலி எதிரியோடு மோதும்போது எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடுமாம். கவிஞர் வாலியோ கண்ணதாசனைப் போட்டியாகவோ எதிரியாகவோ கருதியவர் அல்லர். ஆனால், கண்ணதாசனோடு மோதாமலேயே அவருடைய திறனில் பாதியைத் தன் அஸ்திவாரமாகப் பெற்றவர் என்று தயங்காமல் சொல்லலாம். வாலியின் சொந்தத் திறனோடு இந்தத் திறனும் சேருகையில் கண்ணதாசனுக்கு இணையான அற்புதம் அங்கே நிகழ்கிறது. அதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான வரிகள் தமிழ் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon