மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

கந்துவட்டி: நிலத்தைக் காப்பாற்ற கோரி மனு!

கந்துவட்டி: நிலத்தைக் காப்பாற்ற கோரி மனு!

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகத் திருப்பூரைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தினர் தீக்குளித்து உயிரிழந்ததையடுத்து கந்துவட்டிக்கு எதிரான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. திருப்பூரில் நேற்று (அக்டோபர் 30) ஆட்சியர் பழனிசாமி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், திருப்பூர் மாவட்டம் சோமனூர் அருகே உள்ள வாழைத் தோட்டத்து அய்யனார் கோயில் கிடாத்துறை புதூரைச் சேர்ந்த பழனிசாமி தனது மனைவியுடன் வந்து புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் “திருப்பூர், பல்லடம் சாலை, காட்டன் மார்க்கெட் எதிரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சொத்து பத்திரத்தை வைத்து, ரூ.8.8 லட்சம் கடனாக பெற்றேன். இதையடுத்து 2015ஆம் ஆண்டு வரை தவனை முறையில் வட்டியும் அசலுமாக ரூ.15.2 லட்சம் செலுத்தினேன். பணத்தைக் கட்டிய பிறகும் மேலும் ரூ.16 லட்சம் கொடுத்தால் மட்டுமே சொத்து பத்திரத்தைத் தருவேன் என்கிறார் நிதி நிறுவன உரிமையாளர்.

இதுகுறித்து யாரிடம் புகார் அளித்தாலும் எந்தப் பயமும் இல்லை என கூறி கொலை மிரட்டலும் கொடுக்கிறார். எனது நிலத்தையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம், எனது உயிருக்கும், உடைமைக்கும் தக்கப் பாதுகாப்பு அளித்து, தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதேபோல், திருப்பூரை அடுத்துள்ள மொய்யாண்டம்பாளையம், மஹாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் கந்துவட்டிக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.

இதை விசாரித்த ஆட்சியர் இந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon