தேவிதத்தா திருப்பதி & மனோஜ் குமார்
இந்தியப் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 32.4 பில்லியன் டாலர் (2.11 லட்சம் கோடி ரூபாய்) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன் பிறகு இந்தியாவின் வங்கித்துறையின் பங்குகள் அக்டோபர் 25ஆம் தேதியன்று அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவுக்குக் குறியீடுகள் உயர்ந்துவிட்டன. இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாயை மூலதனமாக வழங்க அக்டோபர் 24ஆம் தேதி இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகே இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தடையைச் சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருகிறார். இந்த முயற்சிக்கு முதலீட்டாளர்கள் வரவேற்பளித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகள் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடு இதுவரை இல்லாத அளவுக்கு 1.3 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஆனால், வங்கிகளுக்கான மூலதனத்தை மத்திய அரசு எப்படி வழங்கும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளது. மேலும், இந்த நடவடிக்கையால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் எதுவும் தாக்கம் ஏற்படுமா என்பதும் கேள்வியாக நம் மனதில் எழுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு 3.5 சதவிகிதமாக இருக்கிறது. சந்தையின் நிலையைக் கவனித்தால் இந்த இலக்கை எட்ட முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் நிதிப் பற்றாக்குறையில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
சில ஏஜன்சிகளின் மதிப்பீடுகளைக் கணக்கில்வைத்துப் பார்த்தாலும், வங்கிகளுக்கு மூலதனம் செலுத்தும் நடவடிக்கை சாத்தியமாகத் தெரியவில்லை. பெசெல் 3 என்ற உலகளாவிய வங்கித்துறை விதிமுறைகளைச் சந்திக்க வேண்டுமென்றால், மார்ச் 2019க்குள் இந்திய வங்கிகளுக்குக் கூடுதலாக 65 பில்லியன் டாலர் மூலதனம் தேவை என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
சுமார் 145 பில்லியன் டாலர் மதிப்பிலான சரிவராத கடன்களை (வாராக் கடன்) இந்திய வங்கித்துறை சுமந்து கொண்டுள்ளது. இதைச் சரிசெய்ய இத்தனை ஆண்டுகளாக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
உலகளவில் வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரமான இந்தியா, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்போது சரிவைச் சந்தித்துள்ளது. பெரும்பாலான சரிவராத கடன்களைக் கையில் வைத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளில் தனியார் முதலீடு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிதி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜோபின் ஜாகப் கூறுகையில், “இறுதியாக வங்கித்துறைக்குத் தேவையான மருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து (மூலதனம்) எப்படி வழங்கப்படும் என்பதும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் ஒருபுறம் இருந்தாலும், வங்கித் துறையை பொறுத்தமட்டில் இது உதவியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
மொத்த மூலதனத் தொகையான 2.11 லட்சம் கோடி ரூபாயில், மூலதனப் பத்திரங்களின் பங்கு 1.35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். வங்கிகளின் பங்கு விற்பனையின் மூலம் 580 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 180 பில்லியன் ரூபாயையும் அரசு பயன்படுத்தவுள்ளது. மேலும், அரசின் அங்கங்கள் வாயிலாக வங்கிகளுக்கு மூலதனத்தைச் செலுத்துவதன் மூலம், நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காமல் தவிர்க்க முடியும்.
இந்திய ரூபாயின் மதிப்பும் முன்பிருந்த 65.09 ரூபாயிலிருந்து 65.15 ஆக வலுவிழந்துள்ளது. வங்கித்துறையில் ஆபத்துகளைத் தவிர்க்க கடன் வழங்குவது குறித்து வங்கிகளுக்கு விதிமுறைகளை விதிக்க வேண்டும் எனவும், வங்கித் துறையைக் காப்பாற்ற சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டுமென்றும் முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வாளரான டேவிட் மார்ஷல் கூறுகையில், “லாபம், கடனின் தரம், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகளுக்கு இலக்குகளை விதிக்க வேண்டும். இதை மிகக் கவனமாக நிர்வகிக்க வேண்டும்” என்கிறார்.
நன்றி: ராய்ட்டர்ஸ்
தமிழில்: அ.விக்னேஷ்