மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

நெல்லிக்காய் சாதம்: கிச்சன் கீர்த்தனா

நெல்லிக்காய் சாதம்: கிச்சன் கீர்த்தனா

இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு #இந்த ஆறு சுவைகளும் அமைய பெற்றுள்ள ஒரே பொருள் நெல்லிக்காய்.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு ஆப்பிள் பழத்தில் உள்ளதைவிட அதிக வைட்டமின்களும் கனிமங்களும் நெல்லிக்காயில் உள்ளது.

இவ்வளவு பலன்கள் உள்ள நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அதைக்கொண்டே முதன்மையான உணவு செய்திருக்கிறோமா... வாருங்கள் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம்

நெல்லிக்காய் சாதம்

செய்ய தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - 2 கப்

பெரிய நெல்லிக்காய் - 8 முதல் 10

காய்ந்த மிளகாய் - 4

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை ஈரம் போகத் துடைத்து அதன் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்து வரும்போது சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி அப்பளத்தோடு பரிமாறுங்கள்.

கீர்த்தனா ஹைக்கூ :

நேத்து பெய்ஞ்ச மழையில இன்னிக்கு முளைச்ச காளான்... வேஸ்ட் பண்ணாம சாப்டுருவோம்...

மழை #காளான்

(நாளை காளான் சமையல் செய்வோமா...)

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon