மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

குயின் ரீமேக்கிலிருந்து விலகிய ஏமி!

குயின் ரீமேக்கிலிருந்து விலகிய ஏமி!

குயின் திரைப்படத்தின் ரீமேக்கிலிருந்து நடிகை ஏமி ஜாக்சன் விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற குயின் திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகிறது என்று செய்தி வந்ததிலிருந்து படக்குழுவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் தமன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் அதிலிருந்து பின்வாங்கி தெலுங்கில் மட்டும் நடிக்க சம்மதிக்க தயாரிப்பு நிறுவனமும் மாறியது.

தமிழில் பாரிஸ் பாரிஸ் என்று பெயரிடப்பட்டு காஜல் அகர்வால் நடிப்பது உறுதியானது. மஞ்சிமா மோகன் மலையாளத்திலும் பாரல் யாதவ் கன்னடத்திலும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தியில் லிஸா ஹைடன் நடித்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருந்த ஏமி ஜாக்சன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஎன்ஏ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “வேடிக்கையான மற்றும் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நான் பெரிதும் விரும்பினேன். ஆனால், சூப்பர் கேர்ள் தொடரில் நடிக்க இருப்பதால் இதற்கு தேதி ஒதுக்க முடியவில்லை” என்று ஏமி ஜாக்சன் கூறியுள்ளார். ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ தொடரான சூப்பர் கேர்ளில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஏமி நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் இணைந்துள்ளார்.

குயின் திரைப்படத்தைத் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ரமேஷ் அரவிந்த்தும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தேசிய விருதுபெற்ற இயக்குநர் நீலகண்டாவும் இயக்குகின்றனர்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon