ஏசி உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான வரியைக் குறைக்க ஜி.எஸ்.டி. ஒழுங்குமுறைக் குழு பரிந்துரைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. எனினும், வரி நிர்ணயத்தில் குறைகள் இருப்பதாகவும், அவற்றைக் குறைக்க வேண்டும் எனவும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறையினர் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. நடைமுறையை இன்னும் எளிதாகவும், கவர்ச்சிகரமாகவும் மேம்படுத்த சில வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு மத்திய அமைச்சர்களைக் கொண்ட ஒழுங்குமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அக்டோபர் 29ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த கூட்டத்தில் அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான ஜி.எஸ்.டி. ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஏசி உணவகங்களுக்குத் தற்போது விதிக்கப்பட்டு வரும் 18 சதவிகித வரியை 12 சதவிகிதமாகக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.7,500க்கு மேல் கட்டணம் கொண்ட தங்கும் விடுதிகளுக்கான வரியை தற்போதுள்ள 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கலவைத் திட்டத்தில் தற்போது ரூ.1 கோடி வரையில் விற்றுமுதல் கொண்ட உற்பத்தியாளர்கள் 2 சதவிகிதமும், உணவகங்கள் 5 சதவிகிதமும் வரிச் செலுத்தி வருகின்றன. இந்த வரி விகிதத்தை 1 சதவிகிதமாகக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.