மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ்!

ப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ்!

மின்னம்பலம்

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் ப்ளூ டூத் மூலம் விடைகளைக் கேட்டு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி மீது 420 மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிகர் கமல் மொபைல் போனில் ப்ளூ டூத் கருவி மூலம் விடைகளைக் கேட்டுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறும் காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தப் பாணியில் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி கையும் களவுமாகச் சிக்கியுள்ளார். நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் துறையில் 985 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் 13,350 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான தேர்வு 24 நகரங்களில் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் சென்னையில் எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி (புதூர் பள்ளி), அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் இன்று (அக்டோபர் 30) தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 763 பேர் கலந்துகொண்டனர். கடும் சோதனைகளுக்கு பின்னரே அனைவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் துறை உதவிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதினார். அப்போது தனது மனைவியிடமிருந்து வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை ப்ளூ டூத் மூலம் கேட்டு எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து கண்காணித்த அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடமிருந்து ப்ளூ டூத் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சபீர் கரீமின் மனைவி ஐதராபாத்திலிருந்து விடையளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 420 மோசடி பிரிவின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியிடமும், அவரது மனைவியிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon