மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

கோலிக்கு ஓய்வு?

கோலிக்கு ஓய்வு?

இந்திய கிரிக்கெட் அணி ஓய்வின்றித் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவருவதால், விடுமுறை கேட்டு கேப்டன் விராட் கோலி தற்போது பிசிசிஐக்கு விண்ணப்பம் அளித்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஜூன் மாதம் முதல் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர், மேற்கிந்திய தீவுகள் தொடர், இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக ஓய்வின்றி விளையாடிவருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை இலங்கைத் தொடர் மற்றும் தென்னாப்ரிக்கத் தொடரில் பங்கேற்கவிருக்கிறது. தொடர் போட்டிகளில் விளையாடும்போது வீரர்களுக்குச் சுழற்சி முறையில் ஓய்வளிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஜனவரி மாதம் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தைக் கருத்தில் கொண்டு கோலி தற்போது விடுமுறை கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோலி அவரது தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக டிசம்பர் மாதம் விடுமுறை கோரியுள்ளார். தற்போது ஓய்வு இல்லாமல் ஆடி வருவதாலும், ஜனவரி மாதம் தொடங்கவுள்ள தென்னாப்ரிக்கத் தொடரைக் கருத்தில் கொண்டும் விடுமுறை கேட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.

இலங்கைத் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, கோலியின் இந்தக் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம். இந்தத் தொடருக்குத் துணைக் கேப்டனாக ரஹானே அறிவிக்கப்பட்டிருந்தார். கோலிக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் ரஹானேவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகளுக்கும் இந்த ஓய்வு நீட்டிக்கப்படுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon