மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

கந்து வட்டி பயங்கரம்: யார் பொறுப்பு?

கந்து வட்டி பயங்கரம்: யார் பொறுப்பு?

கந்து வட்டிக் கொலைக் காட்சிகளைக் காணும்போது பதறுகிறது. ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்துவிட்டேன். மனம் சட்டென்று குழம்பிப்போனது.

எல்லா அவமானங்களையும் அச்சுறுத்தல்களையும்விட கந்து வட்டிக் கொடுமை மிக மோசமானது.

சில அவமானங்களால் பீடிக்கப்பட்டவர்கள் தாங்கள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டு செத்துப்போவார்கள். ஆனால் கந்து வட்டி என்று வந்துவிட்டால், அது குடும்பத்தோடு கொல்லப்படுவதாக ஆகிவிடுகிறது, பச்சிளம் குழந்தைகளைக் கொல்வதாகிவிடுகிறது. எத்தனை எத்தனை செய்திகள்! குடும்பத்தோடு தற்கொலையாம். எந்தக் குழந்தை தற்கொலை செய்துகொள்ள முன்வந்தது?

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையே பாமர மக்களுக்கு எதிரானதுதான். அதில் மக்களுக்கான கடன் என்பது மிக இருளான ஒரு பகுதி. கந்து வட்டிக்காரர்களையும் அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸ் துறையினர், கட்டப் பஞ்சாயத்து ரவுடிகள் ஆகியோர் மீதான கோபத்தை அரசியல் ரீதியில் நாம் காட்ட வேண்டிய அவசியம் நிறைய இருக்கிறது.

முதலாளித்துவத்தின் கீழடுக்கைப் போல மிகக் கேவலமான வேறொன்று இந்த உலகில் இல்லை. இதற்கொரு தீர்வையும் திட்டத்தையும் கண்டாக வேண்டும். இல்லையென்றால் ‘இவர்கள் எரியும்போது எவன் மசிரைப் பிடுங்கபோனீங்க’ என்று மனச்சாட்சி நம்மை உலுக்கிக் கேட்கும்.

நாமறிந்தவரை இந்தியாவில் கந்து வட்டிக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான். ஆனால் அதெல்லாம் முன்பு எப்போதோ.

வைராக்கியம் கொள்ளுங்கள். கந்து வட்டியைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் செய்யுங்கள். நமக்கு அந்தப் பிரச்சினை இல்லையே என்று ஒதுங்காதீர்கள். இதற்கெதிரான மிகக் கடுமையான சட்டமும் வேண்டும், மக்களுக்கான கடன் முறைகளில் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும்.

சாதாரண மக்கள் எப்போதுமே சிறுகச் சிறுகக் கடனை அடைத்து, அதன் பிடியிலிருந்து வெளியேறவே விரும்புகிறார்கள். கடனை அவர்கள் பெருஞ்சுமையாகவும் பேரவலமாகவுமே பார்க்கிறார்கள். லட்சம், கோடிகளில் கடன் பாக்கி வைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல அதை அவர்கள் வெகுமதியாகவும் புள்ளிவிவரமாகவும் கருதுவதில்லை. ஆனால் அவர்களுக்கு கடன் தர யாரும் தயாரில்லை. கந்து வட்டிக்காரர்களைத் தவிர.

முதலில் அவர்கள் கடன் வாங்குவதற்கான காரணத்தையே நாம் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. சாதாரண மக்கள் எதற்காக கடன்வாங்குகிறார்கள்? விவசாயத்துகாக, கல்யாணத்துக்காக, படிப்புக்காக,...

கந்து வட்டியின் முழுப் பரிமாணத்தையும் அறிந்த ஒவ்வொருவருக்கும் ஒன்று நன்றாகத் தெரியும். இதை அழிப்பது மிகமிகக் கடினம். ஏனென்றால், மற்ற எந்த நிதி உதவியும் அவர்களுக்கு வராது. நேரத்தில் கிடைக்காது. அரசும் வங்கிகளும் உங்களுக்கானதல்ல.

ஒரு மனிதனின் அத்தனை சமூகப் பொறுப்புகளையும் சுதந்திரத்தையும் வாழ்க்கையின் மீதான ஆசையையும் நொறுக்குவதில் மிகைவட்டிக் கடன்களுக்கு நிகர் வேறு எதுவுமே இல்லை.

அந்தக் குழந்தைகள்மீது வளர்ந்தெரிந்த தீயைப் பார்க்கவே முடியவில்லை.

இந்த சமூகத்தின் அடித்தளத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்தக் கந்து வட்டி பயங்கரத்தையெல்லாம் நீக்குவதற்கான பொறுப்பு நம்மிடையே இல்லையென்றால் அந்த தீ நம் மீதும் பரவக் கடவது என சுயசாபமிடத்தோன்றுகிறது.

நன்றி: ஆழி செந்தில்நாதனின் ஃபேஸ்புக் பதிவு

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon