மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

மெர்சல்: திரும்பப் பெற வழக்கு!

மெர்சல்: திரும்பப் பெற  வழக்கு!

மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மெர்சல் படத்துக்கு எதிராகப் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று (அக்.23) அவர் அளித்த மனுவில், "மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இந்திய இறையாண்மை, ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளன. படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது நாட்டையும் நாட்டின் வரிவிதிப்பு முறையையும் தவறாகச் சித்தரிக்கும் போக்காகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், "மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தும் இப்படத்துக்குத் தணிக்கைக் குழு எப்படித் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது என்று ஆச்சரியமாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே மத்திய அரசுக்கு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளேன். மெர்சல் படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழைத் திரும்பப் பெறத் தணிக்கைக் குழுவுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon