மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கந்து வட்டி: ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்!

கந்து வட்டி: ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்!

கந்து வட்டிக் கொடுமையால் நான்கு பேர் தீக்குளித்த சம்பவத்துக்கு மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்ததற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் பொறுப்பேற்க வேண்டும். கந்து வட்டிக் கொடுமை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தாயுடன் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கந்து வட்டி தடைச் சட்டம் செயலற்றுக்கிடப்பதைச் சுட்டிக்காட்டி, 2014ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவின் பேரில் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென்று கூறப்பட்டது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த கோர நிகழ்வு ஏற்பட்டிருக்காது” என்று திருநாவுக்கரசர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

“தமிழகத்தில் இதுவரை முடக்கப்பட்டு, செயலற்றுக் கிடக்கும் கந்து வட்டித் தடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே, கந்து வட்டிக் கொடுமையை ஒழித்து, இத்தகைய தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும். தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினருக்கு, தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், இந்தத் தற்கொலை குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட தாய் உள்ளிட்ட இரண்டு குழந்தைகளின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலையும் திருநாவுக்கரசர் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon