மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சோகம்: மஞ்சிமா

சோகம்: மஞ்சிமா

கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு வந்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து சத்ரியன் படத்தில் நடித்த இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இப்படை வெல்லும் படத்தில் நடித்துள்ளார். சத்ரியன் படத்தின் தோல்வி தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "இயக்குநர் கெளரவ் நடிகர்கள் தங்கள் வழியில் நடிப்பதை அனுமதிக்கிறார், ஆனால் சில விஷயங்களில் சமரசம் செய்ய மாட்டார். அச்சம் என்பது மடமையடா மற்றும் சத்ரியனுடன் ஒப்பிடுகையில் இப்படை வெல்லும் மிகவும் துணிச்சலான படம். கதை கேட்டு முடித்ததும் ஒரு நிமிடம் என் தொலைபேசியை என்னால் பார்க்க முடியவில்லை. நான் அதைத் திரையில்கூட உணர முடியும் என்று நம்புகிறேன்.

என் முதல் இரண்டு படங்களும் பெரிய வெற்றிகளாக இருந்ததால் சத்ரியன் தோல்வி அடைந்ததில் எனக்கு ஏமாற்றம் இருந்தது. இது ஒரு மோசமான படம் அல்ல, ஆனால் திரைக்கதை மெதுவாக இருப்பதாக விமர்சனங்கள் பரவின. உரையாடல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதுபோல் இருக்கிறது என்று மக்கள் எண்ணினார்கள். ஆனால் என் நடிப்பு பாராட்டப்பட்டது. படத்தின் தோல்வி தந்த ஏமாற்றத்திலிருந்து ஒரு நாள் கழித்துதான் நான் வெளியே வந்தேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற கட்டங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது குயின் திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் மஞ்சிமா நடித்துவருகிறார். இதற்கு ஸம் ஸம் என பெயரிடப்பட்டுள்ளது. “ஸம் ஸம் என்பது மக்காவின் புனித நீர். மலையாளப் பதிப்பில் என்னுடைய பாத்திரம் முஸ்லிம் பின்னணியைக் கொண்டிருக்கிறது. எனக்குக் கிடைத்த மற்றொரு அழகான திரைப்படம் இது. அடுத்த மாதம் ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடக்கிறது. மக்கள் என் கதாபாத்திரத்தை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon