மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு!

பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு!

மத்திய அரசு ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் விவசாயிகளின் உற்பத்திக்கான நல்ல விலை கிடைக்கும் என்றும் பருப்பு தொழில்துறை சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியப் பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம் (ஐ.பி.ஜி.ஏ), நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் பொது விநியோக அமைப்புக்கு (பி.டி.எஸ்) எழுதியுள்ள கடிதத்தில், “பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பருப்பு விநியோகிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும். மக்களுக்கும் ஊட்டச்சத்து வசதிகள் கிடைப்பது எளிதாகும். எனவே அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமையை மத்திய அரசு கிலோ ஒன்றுக்கு ரூ.2 - ரூ.3க்கு வழங்கி வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் 80 கோடி மக்கள் க்ஷபயன்பெறுகின்றனர். இதற்கு ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி செலவாகிறது. இந்தியா தனது உள்நாட்டுத் தேவைக்கு இணையான அளவுக்குப் பருப்பை உற்பத்தி செய்கிறது. 2016-17 வேளாண் பருவ ஆண்டில் (ஜூலை - ஜூன்) 22.95 மில்லியன் டன் அளவிலான பருப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில் இந்தியா 5 மில்லியன் டன் பருப்பை இறக்குமதி செய்திருந்தது.

கடந்த காரிஃப் பருவத்தில் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்காததால் பருப்பு உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். வரும் காலங்களில் அப்படியொரு இழப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்படக் கூடாது என்று அவர்கள் எண்ணுகின்றனர். எனவே, ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பருப்பை விநியோகித்தால் விவசாயிகளும், ஏழை எளிய மக்களும் பயனடைவர் என்று ஐ.பி.ஜி.ஏ. மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே ரேஷன் கடைகளில் மாநில அரசு மானிய விலையில் பருப்பு விநியோகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது