மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

சசிகலாவுக்கு கட்சியை வழிநடத்த தகுதியில்லை!

சசிகலாவுக்கு கட்சியை வழிநடத்த தகுதியில்லை!

இரட்டை இலை தொடர்பாக நடைபெற்று வரும் இறுதி விசாரணையில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கட்சியை வழிநடத்தும் தகுதி கிடையாது என்று ஒருங்கிணைந்த அணியினர் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து அக்டோபர் 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தொடர்ந்து முறையே கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி, தினகரன் என இரு தரப்பினரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். சசிகலா, தினகரன் கையில் அதிமுக சென்றால், அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். என்று எடப்பாடி தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அடுத்து கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில்," ஒருங்கிணைந்த அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குளறுபடிகள் உள்ளன. இரட்டை இலை சின்னத்தைப் பெற, கட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும்"என்ற வாதம் தினகரன் தரப்பிலிருந்து எடுத்துவைக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் இன்று ( அக்டோபர் 23) மூன்றாம் கட்டமாக மீண்டும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஒருங்கிணைந்த அணியினர் சார்பில் முகில் ரோத்தகி, வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும், தினகரன் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, அஷ்வினி குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

தினகரன் தரப்பிலிருந்து முதலில் வாதத்தை எடுத்து வைத்த மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், "அதிமுக விதிப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை, கட்சியின் பொதுச்செயலாளருக்கே உச்சக்கட்ட அதிகாரம் உள்ளது. எடப்பாடி தரப்பினர் தாக்கல் செய்துள்ளது போலி பிரமாணப் பத்திரங்கள் என்பதை நிரூபிக்க அவகாசம் தேவை " என்று வாதிட்டார்.

அடுத்து ஒருங்கிணைந்த அணிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வைத்தியநாதன்,"எங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் எந்தவித முறைகேடும் இல்லை. விசாரணையை தாமதப்படுத்தவே தினகரன் அணியினர் அவகாசம் கேட்கின்றனர். தினகரன் தரப்பினர் போலி என்றுகூறிய பிரமாணப் பத்திரங்களை நீக்கிவிட்டாலும் எங்களிடம்தான் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளனர். ஒருங்கிணைந்த அணியினர் கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்பட அனைத்து காட்சிகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது" என்ற வாதத்தை முன்வைத்தார்.

இதையடுத்து தினகரன் தரப்பினர் சார்பில், " கட்சியின் சட்டத்தை திருத்த பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்கள் செல்லாது" என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த அணிகள் தரப்பிலிருந்து," கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றுகூறிதான் ஜெயலலிதா, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்தார்.அதிமுக சட்டவிதிகளின்படி சசிகலா கட்சிப் பதவியை வகிக்க முடியாது. தொடர்ந்து சசிகலா சிறை தண்டனைப் பெற்றுள்ளதால் கட்சியை வழிநடத்தும் தகுதி அவருக்கு கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இரட்டை இலையை தங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற நியாயமான வாதத்தையும் தினகரன் தரப்பினர் இதுவரை முன்வைக்கவில்லை. எங்களுடைய தரப்பின் பிரமாணப் பத்திரங்களுடன் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை இணைத்துள்ளோம்" என்று வாதம் செய்தனர்.

இதையடுத்து தினகரன் தரப்பிலிருந்து," பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மை குறித்து குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும், போதுமான வாதங்களை எடுத்து வைக்க அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டது, இதற்கு ஒருங்கிணைந்த அணியினர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவடையாத நிலையில் தேர்தல் ஆணையத்தில் நாளையும் விசாரணை நடைபெறவுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon