மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

ரெய்டில் தமிழகம்: அன்று அரசியல், இன்று சினிமா!

ரெய்டில் தமிழகம்: அன்று அரசியல், இன்று சினிமா!

விஷாலுக்குச் சொந்தமான ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை வடபழனி குமரன் காலனி பகுதியில் 'விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் உள்ளது. அங்கு இன்று (அக்.23) மத்திய கலால் துறையின்கீழ் செயல்பட்டுவரும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவை சேர்ந்த நான்கு அதிகாரிகள் டி.பி.நாகேந்திரகுமார் தலைமையில் பிற்பகல் 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பின்னர் விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் படம் வெளியானது. இந்த படத்துக்கு முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையில் படநிறுவனத்தின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணம் மதிப்பழிப்பு குறித்து இடம்பெற்றிருக்கும் விமர்சன கருத்துகளுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு அந்த காட்சிகளை நீக்க வலியுறுத்தினர். இதற்கு விஷால் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக கூறினார். “இந்த செயல் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் பார்ப்பவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது எனவே எச்.ராஜா அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று விஷால் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த 24 மணிநேரத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது இயல்பாக நடைபெறும் சோதனையா அல்லது அவரை அச்சுறுத்தும் நோக்கிலா என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சோதனை குறித்து நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ், "இந்த சோதனை அரசு திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ளவே என்று தெரிவிக்கப்பட்டாலும், விஷால் அவர்கள் ‘மெர்சல்’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்கு எதிராக பொதுவான கருத்துக்களை சொல்லும்போது அவர்களை பயமுறுத்தவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. நம் கருத்துக்களை சுதந்திரமாக பேசவிடாமல் தடுக்கவும், அச்சுறுத்தவுமே இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் சோதனை விஷாலை பழிவாங்கும் நடவடிக்கையா என்று யூகங்கள் எழுந்தாலும் துப்பறிவாளன் படத்தை ‘அமேசான் ப்ரைம்’ நிறுவனத்திடம் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்ததன் வாயிலாக நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக விஷால் தெரிவித்திருந்தார். இன்னும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான ஜிஎஸ்டி வரி குறித்து தெளிவான வரைவுகள் வெளியாகாததால், அதற்கான வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக சில தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இப்படி யூகங்கள் மட்டுமே பதிலாக வரும் நிலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த சோதனை மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது. இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு 'லைகா' நிறுவனத்திலும் ஜிஎஸ்டி வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. .

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon