மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

உழைப்பால் முதல்வரானவர் எடப்பாடி: தினகரன்!

உழைப்பால் முதல்வரானவர் எடப்பாடி: தினகரன்!வெற்றிநடை போடும் தமிழகம்

தனது உழைப்பாலும், மக்களின் ஒருமித்த ஆதரவோடும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியுள்ளதாக டி.டி.வி. தினகரன் கிண்டலாகப் பேசியுள்ளார்.

சென்னை அடையாறில் இன்று (அக்.23) செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இரட்டை இலைச் சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை. எடப்பாடி அணிக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பதற்கு நேரம் ஆகிறதே தவிர, நாங்கள் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கைத் தாமதப்படுத்துகிறோம் என்று சொல்வது சரியில்லை. நீதி வழங்கும் விஷயத்தில் நேரம் நிர்ணயிக்க முடியாது. நவம்பர் 10ஆம் தேதிக்குள் முடிவெடுத்தால் அது சரியாக இருக்காது. அப்படி ஏதாவது முடிவெடுக்கப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம். சட்டமன்ற, நாடாளுமன்ற, பொதுக்குழு உறுப்பினர்களை அதிகம் வைத்திருந்தால் இரட்டை இலை கிடைத்துவிடும் என்று மாற்று அணியினர் நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது” என்றார்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என்று எல்லாம் மத்திய அரசிடம் இருப்பதால், அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். குறிப்பாக சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரிச் சோதனைக்குப் பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் அரிஸ்டாட்டில் ஜெயக்குமார் போன்றோர் எப்படிப் பேசுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்ட தினகரன், தமிழகத்தில் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு வளர வேண்டும் என நினைத்தால் நிச்சயம் அது தோல்வியில்தான் முடியும் எனவும் கூறினார்.

சசிகலாதான் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணம் என்று பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்று இன்று மக்களுக்குத் தெரியும் என்றவர்,

“தனது உழைப்பாலும் தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. அவர், சுயம்புவாகவே முதல்வரானார்” எனவும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மெர்சல் விவகாரம் குறித்து பேசும்போது, “மெர்சல் ஒரு தமிழ்த் திரைப்படம். அதனை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும், ஹெச்.ராஜாவுக்கும் மெர்சல் படக் குழுவினர் நன்றி சொல்ல வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ளதால் அனைவரையும் மிரட்டும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர். தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசைப் பார்த்து பயப்படுவதால் தமிழகமே பயப்படுகிறது என நினைக்கக் கூடாது. மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத்தானே மெர்சல் படத்தில் பேசியுள்ளார்கள். உங்களுக்குப் பிரச்சினை என்றால் படக் குழுவினரை அழைத்து உங்கள் குறைகளைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் மிரட்டல் விடுப்பது போன்ற பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் அரசியல்வாதியாக உள்ள அனைவருக்கும் தலைக்குனிவை உண்டாக்கியுள்ளன” என வேதனை தெரிவித்தார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon