மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

மீண்டும் தள்ளிப்போன அறம்!

மீண்டும் தள்ளிப்போன அறம்!

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நயன்தாரா சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் அறம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளிவரவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகு, தீபாவளியன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இல்லை என்று ஆன பிறகு, நவம்பர் 3ஆம் தேதி என அறிவித்திருந்தனர். தற்போது அதனை மாற்றி நவம்பர் 10ஆம் தேதி எனப் படக்குழு அறிவித்துள்ளது.

நயன்தாராவின் மேனஜர் கோட்டப்பாடி ஜெ. ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு பீட்டர் ஹெய்ன் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரானின் இசை படத்திற்குப் பக்கபலமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் படக் குழுவினர்.

படம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, "பதைபதைப்போடும் நெகிழ்ச்சியோடும் தத்துவ பலத்துடன் நான் பார்த்த இயக்குநர் கோபி நயினாரின் நேர்மையான படம் அறம்..சகோதரி நயன்தாராவுக்கு ஸ்பெஷல் சல்யூட்" எனக் கருத்து தெரிவித்திருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

படத்தை நவம்பர் 3ஆம் தேதி வெளியிடாததன் காரணம் குறித்து படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. “இரட்டை வரி விதிப்பு காரணமாக அக்டோபர் 6ஆம் தேதி வெளியீடு செய்யப்படவிருந்த திரைப்படங்கள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டன. ஆகையால், நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படவுள்ள அந்தப் படங்களுக்கு வழிவிட்டு, நவம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் அறம் வெளிவரவுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

அறம் வெளியாகும் அதே நாளில் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படமும், கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித் திரைப்படமும் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon