மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய்

இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய்

இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது. முரளி விஜயும் இஷாந்த் ஷர்மாவும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை அணி, இந்தியாவில் வரும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 24 வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை, எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த முரளி விஜய், மணிக்கட்டு காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து வெளியேறியனர். அதனைத் தொடர்ந்து லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு உடல்நலம் தேறி, ரஞ்சிக் கோப்பைத் தொடரில் தமிழக அணிக்காக விளையாடினார்.

ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தின் போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் வலி ஏற்பட்டு இரண்டாவது இன்னிங்க்ஸின் பாதியிலேயே வெளியேறினார். அதனைத் தொடர்ந்து திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இலங்கை தொடருக்கு இன்னும் 3 வாரம் இருப்பதால் அதற்குள் அவர் உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு எதிரான ஆடும் லெவனில் வாய்ப்பு பெறலாம்.

29 வயதான இஷாந்த் ஷர்மாவும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ் விளையாடிய இஷாந்த், வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்தார். அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கைத் தொடரில் இவர் இடம்பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் இடம்கிடைக்கவில்லை. தற்போது ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் துணை கேப்டனான ரோஹித் ஷர்மா, கடைசியாக 2016ஆம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் ஆஸ்தான டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சமி, உமேஷ் யாதவுடன் புவனேஸ்வர் குமாரும் அணியில் நீடிக்கிறார். சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கின்றனர். இவர்களுடன் குல்தீப் யாதவும் மூன்றாவது ஸ்பின்னராக அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) இந்திய அணி விவரம்:

முரளி விஜய், கே.எல். ராகுல், ஷிகர் தவன், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon