மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பினராயி - திருமாவளவன் சந்திப்பு!

பினராயி - திருமாவளவன் சந்திப்பு!

கேரளாவில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நடவடிக்கை எடுத்ததற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ், 1,248 கோவில்கள் உள்ளன. அதில் காலியாக இருந்த 62 அர்ச்சகர் பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதனை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டது.

இத்தேர்வின் அடிப்படையில், பிராமணர் அல்லாத 36 பேரும், பிராமணர்கள் 26 பேரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் 6 பேர் தலித்துகள். கேரள அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.23) சந்தித்துத் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

பினராயின் இந்த நடவடிக்கை இந்தியச் சமூக நீதியில் மிகப்பெரிய மைல் கல் எனத் தனது வாழ்த்து மடலில் பாராட்டியுள்ள திருமாவளவன், மத சகிப்பின்மை அதிகரித்துவரும் இந்த நேரத்தில் கேரளாவில் செயல், அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பது வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியாரின் கொள்கைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவின் நடவடிக்கை மொத்த தேசத்திற்கும் ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது எனவும் புகழ்ந்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் பினராயி விஜயன் கலந்துகொண்டதற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி விவகாரத்தைத் தேசிய அளவில் முன்னெடுக்கவும் பினராயிக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon