மெர்சல் திரைப்படத்தை விமர்சித்ததற்காகப் பலர் தன்னைத் தொலைபேசியில் அழைத்துத் திட்டுகின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தவறான கருத்து குறித்தே நான் பதிவு செய்தேன். ஆனால், நான் தவறாக எதுவும் பதிவு செய்யவில்லை. ஜனநாயகத்தில் எந்த ஒரு கருத்துக்கும் எதிர்க் கருத்து சொல்ல உரிமை உண்டு. அப்படி வெளியிடப்படும் கருத்துக்களை எதிர்கொள்வதற்கென உரிய வழியைத்தான் பின்பற்ற வேண்டும். படத்தில் தவறான புரிந்துணர்வு இருந்ததால்தான் கருத்து தெரிவித்தேன்.
ஆனால், தற்போது நேற்று இரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை தொலைபேசி மூலம் மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. படுமோசமாகத் திட்டினர். திட்டுவது, கடும் விமர்சனம் வைப்பது, இணையதளங்களில் விமர்சிப்பது ஆகியவை சரியான முறையல்ல. நான் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பாஜகவை விமர்சித்துவருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் பாஜக தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.