மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ரசாயன உரங்களைத் தவிர்க்கும் விவசாயிகள்!

ரசாயன உரங்களைத் தவிர்க்கும் விவசாயிகள்!

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் நோய்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள விவசாயிகள் உயிர் பூச்சிக் கொல்லி உரங்களை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. உயிர்ப்பூச்சிக் கொல்லி உரங்களின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், '2010-11 முதல் 2016-17 வரையிலான காலத்தில் உயிர்ப்பூச்சிக் கொல்லி உரங்களின் பயன்பாடு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வேதியியல் உரங்களின் பயன்பாடு 2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்தியாவில் உயிர்ப்பூச்சிக் கொல்லி உரங்கள் 2011-12ஆம் ஆண்டில் 5,151 டன் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் இதன் பயன்பாடு 6,340 டன்னாக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு 55,540 டன்னிலிருந்து 57,000 டன்னாக அதிகரித்துள்ளது.

ரசாயன உரங்கள் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது. உயிர் பூச்சிக்கொல்லி உரங்கள் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள் மற்றும் கனிமங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய உயிர்ப்பூச்சிக் கொல்லிகளால் மனித உடலுக்கோ அல்லது சுற்றுச் சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.

ரசாயன உரங்களை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களே அதிகமாகப் பயன்படுத்துகின்றன. 2016-17ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட 57,000 டன் ரசாயன உரத்தில் மகாராஷ்டிரா 23 சதவிகிதமும் (13,496 டன்), உத்தரப் பிரதேசம் 18 சதவிகிதமும் (10,142 டன்), ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா 10 சதவிகிதமும் (5,724 டன்) பயன்படுத்தியுள்ளன.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon