மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

கோயம்பேடு: காய்கறி விலை உயர்வு!

கோயம்பேடு: காய்கறி விலை உயர்வு!

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

அக்டோபர் 18 தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த வாரம் முழுவதுமே சென்னை கோயம்பேடு மொத்த விலைச் சந்தையில் காய்கறி வரத்து வழக்கத்தை விடச் சரிந்திருந்தது. குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகளின் அளவு குறைந்துவிட்டது. இதனால் பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல, பீன்ஸ் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், கேரட் விலை 35 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், முருங்கைக்காய் விலை 100 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக லாரி ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டதால் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டதாகவும், அதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கோயம்பேடு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல கடந்த சில நாட்களாகவே எந்தக் காய்கறிகளும் அறுவடை செய்யப்படவில்லை என்பதாலும் காய்கறி வரத்து குறைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். பண்டிகை காலம் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் காய்கறி வரத்து அதிகரித்து, விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon