மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

காசிமேட்டில் சாலை மறியல்!

காசிமேட்டில் சாலை மறியல்!

படகுகளில் சீன எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசிமேட்டில் இன்று (அக்டோபர் 23) காலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காசிமேட்டில் பதற்றம் நிலவுகிறது

“அதிக வேகம் மற்றும் அதிக குதிரைத் திறன் கொண்ட சீன எந்திரங்களைப் படகுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி, சீன எந்திரத்தை பயன்படுத்தி அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் மீன் பிடித்துவருகின்றனர். இதனால் ஆழத்தில் உள்ள பெரிய மீன்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் வளம் அழிந்துவிடும். அமைச்சர் ஜெயக்குமாரின் நடவடிக்கைகளால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில் நசிவடைந்து வருகிறது” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்தான், தடை செய்யப்பட்ட சீன எந்திரத்தை விசைப் படகுகளிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் சாலை மறியல் செய்தனர். மறியல் போராட்டத்தின்போது போராட்டக்காரர்களில் சிலர் அவ்வழியே வந்த பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து மீனவர்களை எச்சரித்த காவல் துறையினர் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டக்காரர்கள் கலையாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களைக் காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் சில மீனவர்கள் காயமடைந்தனர். சாலை மறியலைக் கைவிட மீனவர்கள் மறுப்பதால் காசிமேட்டில் பதற்றம் நிலவுகிறது. மீனவர்களின் மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காசிமேடு சூரியநாராயணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon