விக்ரமோடு இணைந்து பணியாற்றுவது பெரும் ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தமன்னா விக்ரமுடன் இணைந்து நடிக்கவில்லையே என்ற பெயரை மாற்றும் விதமாக விஜய் சந்தர் இயக்கும் ஸ்கெட்ச் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆக்சன் திரில்லர் வகையைச் சேர்ந்த இத்திரைப்படம் விக்ரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமோடு இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தமன்னா பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், “திரைத்துறையில் நீண்டகாலமாக சிறந்த நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவரது அறிவையும் திறமையையும் அவரது நடிப்பின் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். ஒவ்வொரு முறை அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகும் போது அந்த கதாபாத்திரத்தை உன்னிப்பாக கையாளுகிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “எந்தவிதமான சூழ்நிலையிலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். அவரது கடின உழைப்பும், ஒழுக்கமும், ஆற்றலும் வியக்கவைக்கின்றன. அவர் எதனால் தனது துறையில் சிறந்து விளங்குகிறார் என இப்போது என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.